அதிமுக அரசு பழைய திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் அடித்து புதிய திட்டங்கள் போல் துவக்குகிறது: ஸ்டாலின் விமர்சனம்

விழுப்புரம்: அதிமுக அரசு பழைய திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் அடித்து புதிய திட்டங்கள் போல் துவக்குவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின் தேர்தல் பிரசார கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார். இதுவரை மக்களுக்கு எதுவும் செய்யாத முதல்வர் பழனிசாமி, இப்போது தான் கல்வெட்டுகளை திறந்துவைக்கிறார். இடைக்கால பட்ஜெட்டில் ஏராளமான கற்பனை அறிவிப்புகள் எல்லாம் அறிவித்துள்ளனர் என கூறினார். பழனிசாமி, பன்னீர்செல்வத்திற்கு தெரிந்த ஒரே விஷயம் கடன் வாங்குவது. கடன் வாங்கி தமிழகத்தின் கடனை 5.70 லட்சமாக அதிகரித்துள்ளனர். தேர்தல் வரவுள்ளதால் பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வருகிறார்.

அனைத்து மாவட்டங்களிலும் திமுக அராஜகத்தை அவிழ்த்துவிட்டதாக பிரதமர் பேசுகிறார். அவரிடம் என்ன ஆதாரம், என்ன புள்ளிவிவரம் உள்ளது? என கேள்வி எழுப்பினார். தமிழகம், புதுச்சேரியில் சமீபத்தில் பா.ஜ.,வில் இணைந்தவர்கள் குறித்து பிரதமரும், உள்துறை அமித்ஷாவும் விசாரித்து பாருங்கள். அனைவரும் குற்றப்பின்னணி கொண்டவர்கள். அப்படி இருக்கையில் திமுக பற்றி பேசுவதை இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள் என எச்சரிக்கை விடுத்தார். ஒரு பெண் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் ஜெயலலிதா என மோடி பேசியுள்ளார். ஆனால் மாநிலங்களில் சிறந்த ஆட்சியை தந்தது லேடியா மோடியா என உரக்க பேசியது ஜெயலலிதா என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். 2016ல் மே மாதம் ஓசூர், சென்னையில் நடந்த கூட்டத்தில் ஜெயலலிதாவின் ஆட்சியில் ஊழல் பெருகியுள்ளது ஊழல் மிகுந்த இந்த ஆட்சியை மாற்ற வேண்டும் என பிரதமர் மோடி பேசினார்.

அதேபோல், மதுரை கூட்டத்தில் அமித்ஷா ஊழல் மேல் ஊழல் செய்யும் ஆட்சிக்கு சொந்தக்காரர் ஜெயலலிதா என பேசினார். இதையெல்லாம் மறந்துவிட்டீர்களா? இப்போது ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி நாடகம் ஆடுகிறார் மோடி என கூறினார். தங்களது கொள்ளையில் இருந்து தப்பவே மோடியை ஆதரிக்கிறார் பழனிசாமி. இந்த நாடகங்களை எல்லாம் தமிழக மக்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். பழைய திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் அடித்து புதிய திட்டமாக துவங்குகின்றனர். மக்களின் எந்த கோரிக்கைகளையும் நிறைவேற்றவில்லை. இனி அமையவுள்ள திமுக ஆட்சியில் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என உறுதியளிக்கிறேன் என கூறினார்.

Related Stories:

>