உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் அம்மா சிமெண்ட் கிடைக்காததால் பாதியில் நிற்கும் கட்டுமானப்பணிகள்-பொதுமக்கள் திண்டாட்டம்

உத்தமபாளையம் : உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் அம்மா சிமெண்ட் கிடைக்காமல் கட்டிடப்பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர்.உத்தமபாளையம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மலிவு விலையில் அம்மா சிமெண்ட் விற்பனை செயப்பட்டது.

இங்கு வட்டார அளவில் உத்தமபாளையம். உ. அம்மாபட்டி,ராமசாமி நாயக்கன்பட்டி, கோகிலாபுரம். உள்ளிட்ட 13 கிராம ஊராட்சிகளில் வசிப்பவர்கள் மற்றும் பல்வேறு கிராமங்களிலும், வசிக்கக்கூடிய பொதுமக்கள், தங்களது மிகச்சிறிய அளவில், வீடுகள்,  கட்டிடங்கள், கட்டும் போதும், ஏற்கனவே பழுதடைந்து ஒழுகும் நிலையில், உள்ள வீடுகளை சரிசெய்து கட்டவும், இங்கு பதிவு செய்து, மானிய விலையில் அம்மா சிமெண்ட் வாங்கி செல்கின்றனர்.

ஒரு மூட்டை சிமெண்ட் 216 ரூபாய்க்கு  விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் அம்மா சிமெண்ட் வரும்போது இங்குள்ள அதிகாரிகள், பொதுமக்களுக்கு தேவையை அறிந்து  100 மூட்டை, 200 மூட்டை என சப்ளை செய்வதுடன், காண்ட்ராக்டர்களும், இதனை வாங்கி வருகின்றனர். வெளிமார்க்கெட்டில் ஒரு மூட்டை ரூ 400 க்கு மேல் விற்கப்படுகிறது.

தேனி மாவட்டத்தில் கொரானா ஊரடங்கிற்கு பிறகு தற்போது தான், கட்டிடப் பணிகள்  தொடங்கியுள்ளன. மிகக் குறைந்த சதுரடியில் வீடு கட்டுவோர், ஊராட்சி ஒன்றிய  அதிகாரிகளை அணுகி தங்களுக்கு தேவையான சிமெண்ட், வாங்க வருகின்றனர். ஆனால் கடந்த 5 மாதங்களாக நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு, மானிய விலையில், வரக்கூடிய அம்மா சிமெண்ட் வருவதில்லை என திருப்பி அனுப்புகின்றனர். இதனால் கட்டிடப் பணிகள் பாதியில் நிற்கின்றன.

மிகவும் கஷ்டப் படக் கூடிய, குடும்பங்கள் தினந்தோறும் உத்தமபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய குடோனுக்கு வந்து,  தங்களுக்கு சிமெண்ட் வந்துவிட்டதா என கேட்டு ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதனால் வெளி மார்க்கெட்டில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாய சூழல் நிலவுகிறது.  தேனி மாவட்டத்தில் தற்போது அம்மா சிமெண்ட் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

துணை முதல்வர் ஓபிஎஸ் நடவடிக்கை எடுப்பாரா?

தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மாவட்டமான தேனியில் ஏழைகள் பயன்படக்கூடிய  அம்மா சிமெண்ட் கிடைப்பதில் பெரும் சிரமம் நிலவுகிறது. மக்களின் குறைகளை நேரடியாக தீர்க்க வேண்டிய அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக அம்மா சிமெண்ட் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை, தேனி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய  நிர்வாகப் பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, விரைந்து எடுக்க முன்வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>