செங்கானூர் ரயில்வே சுரங்கப்பாதை விவகாரம் தாசில்தாருக்கு தபாலில் ஸ்மார்ட் கார்டுகளை அனுப்பிய மக்கள்

கடையம் : தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்டது செங்கானூர். இக்கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்லும் வழியில் நெல்லை - தென்காசி இருப்பு பாதையில் இருந்த ரயில்வே கேட், 2017ல் அகற்றப்பட்டு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. 2018ல் மக்கள் பயன்பாட்டுக்கு வந்த இந்த சுரங்கப்பாதையில் மழை காலங்களில் பெருமளவு தண்ணீரும், மற்ற நாட்களில் நீருற்று காரணமாக முட்டளவுக்கு தண்ணீரும் தேங்கி கிடக்கிறது. இதனால் கிராம மக்கள், இவ்வழியாக கடந்து செல்ல பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.

இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளாக மாற்றுப்பாதை கேட்டு ரயில் மறியல் உள்பட தொடர் போராட்டங்களை நடத்தியும் பலனில்லை. இந்நிலையில் ஊரிலுள்ள அம்மன் கோயிலில் திரண்ட கிராம மக்கள், கடந்த 5ம் தேதி வாக்காளர் அடையாள அட்டைகளை கவர்னருக்கு தபாலில் அனுப்பி வைத்தனர்.

மேலும் ஊரின் எல்லைப்பகுதியில் வருகிற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் போர்டு வைத்தனர். கடந்த பிப்.10ம் தேதி மீண்டும் ஒன்று திரண்ட செங்கானூர் மக்கள், மாற்றுப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் ரேஷன் ஸ்மார்டு கார்டு மற்றும் ஆதார் கார்டுகளை திரும்ப ஒப்படைக்கப் போவதாக அறிவித்தனர். தகவலறிந்து வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பிப்.13ம் தேதிக்குள் இப்பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படுமென அறிவித்தனர்.

ஆனால் இதுவரை மாற்றுப்பாதை பிரச்னைக்கு எந்த முடிவும் எட்டப்படாததால், நேற்று 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்களது ஸ்மார்டு கார்டுகளை பதிவு தபாலில் தென்காசி தாசில்தாருக்கு அனுப்பி வைத்தனர். வரும் நாட்களில் மற்ற குடும்பத்தினரும் ஸ்மார்டு கார்டுகளை அனுப்பி வைக்க உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

சேரன்மகாதேவியிலும் போராட்டம்

வீரவநல்லூர்:  சேரன்மகாதேவி தெற்குநாலாந்தெரு அருகே 3 ஆண்டுக்கு முன் ஆளில்லா ரயில்வே கிராசிங் அகற்றப்பட்டு சுரங்க ரயில்பாதை அமைக்கப்பட்டது. ஆனால் இந்த பாதையில் தண்ணீர் ஊற்று அடிப்பதால் அவ்வழியாக மக்கள் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கடந்த ஆகஸ்ட் மாதம் தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து சுரங்க பாதையில் பணிகள் நடந்து வந்தன.

இந்நிலையில் நேற்று அப்பகுதிக்கு ஜேசிபி இயந்திரத்துடன் சென்ற ரயில்வே ஊழியர்கள், தற்காலிக வழிப்பாதையை மூடுவதற்கு ஆயத்தமாகினர். இதையறிந்த திரண்ட மக்கள், ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த சேரன்மகாதேவி எஸ்ஐ சிவதாணு மற்றும் ரயில்வேத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தர நடவடிக்கை எடுத்த பிறகுதான் தற்காலிக பாதையை மூட வேண்டும் என வலியுறுத்தினர். இதில் சுமூக முடிவு எட்டப்படாததால் பணிகள் நிறுத்தப்பட்டு நாளை(இன்று) காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. இதையேற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Related Stories:

>