ஏலகிரி மலை காவல் நிலைய முதுநிலை பெண் காவலர் சிறந்த காவலராக தேர்வு-சான்றிதழ், கேடயம் வழங்கி எஸ்பி பாராட்டு

ஜோலார்பேட்டை : ஏலகிரி மலை காவல்நிலை முதுநிலை காவலர் சிறந்த காவலராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு எஸ்பி விஜயகுமார் சான்றிதழ், கேடயம் வழங்கி பாராட்டினார். திருப்பத்தூர் மாவட்டத்தில் பணி புரிந்துவரும் காவலர்களின் பணியை ஊக்குவிக்கும் வகையில் வாரந்தோறும் சிறந்த காவலராக தேர்வு செய்து அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், கேடயம் மற்றும் புத்தகங்கள் ஆகியவற்றை எஸ்பி விஜயகுமார் வழங்கி பாராட்டி வருகிறார்.

அதன்படி, இந்த வாரம் சிறந்த காவலராக  ஜோலார்பேட்டை காவல் நிலைய சர்க்கிள் ஏலகிரி மலைகாவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் கந்திலி பகுதியை சேர்ந்த முதுநிலை பெண் காவலர் லட்சுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த வாரம் திருப்பத்தூரில் நடந்த கொலை சம்பவத்திற்கு பிறகு பணி முடிந்து  திருப்பத்தூர், புதுப்பேட்டை பஸ் நிறுத்தம் பகுதியிலிருந்து வீட்டிற்கு கந்திலி  செல்வதற்காக பேருந்தில் பயணித்துள்ளார்.

அப்போது சந்தேகிக்கும் வகையில் இரண்டு நபர்கள் பதற்றத்துடன் பர்கூர் பகுதிக்கு டிக்கெட் எடுத்து கந்திலியில் இறங்கியுள்ளனர். இதுகுறித்து பெண் காவலர் லட்சுமி போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து, திருப்பத்தூர் நகர காவல் நிலைய கொலை வழக்குடன் தொடர்புடையவர்களை பிடிக்க உதவியுள்ளார்.  

அந்த வகையில் இந்த வாரத்திற்கான சிறந்த காவலராக  லட்சுமி தேர்வு செய்யப்பட்டார்.  அவருக்கு எஸ்பி விஜயகுமார் நேற்று முன்தினம் பாராட்டு சான்றிதழ், கேடயம் மற்றும் புத்தகங்களை வழங்கி கவுரவித்தார். இதனையடுத்து ஜோலார்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பழனிமுத்து, ஏலகிரி மலை காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் உள்ளிட்ட போலீசார் லட்சுமிக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Related Stories:

>