முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி, யுபிஎஸ்சி உறுப்பினர் புதுச்சேரி ஆளுநராக பீம் சைன் பாஸி நியமனம்?

புதுடெல்லி: புதுச்சேரி மாநில முதல்வராக நாராயணசாமி இருந்த போது, ஆளுநராக இருந்த முன்னாள் போலீஸ் அதிகாரி கிரண் பேடிக்கும் இடையே நிர்வாக ரீதியாக பல பிரச்னைகள் இருந்தன. சமீபத்தில் நாராணசாமி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்ட நிலையில், கடந்த 16ம் தேதி புதுச்சேரியின் லெப்டினன்ட் கவர்னர் பதவியில் இருந்து கிரண் பேடி திடீரென நீக்கப்பட்டார். அன்றிலிருந்து அந்த பதவி காலியாக உள்ளது. இதற்கிடையே தெலங்கானா முதல்வரான தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரியின் பொறுப்பு ஆளுநராக அறிவிக்கப்பட்டார். தற்போது அவர், இருமாநில ஆளுநர் பதவிகளை வகித்து வருகிறார்.

இந்நிலையில், புதுச்சேரிக்கு நிரந்தர ஆளுநர் நியமிப்பது தொடர்பாக பலரது பெயர்களை மத்திய உள்துறை பரிசீலித்து வருகிறது. அந்தவகையில், யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) உறுப்பினரான டெல்லி முன்னாள் போலீஸ் கமிஷனர் பீம் சைன் பாஸியின் பெயர் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இவர் யுபிஎஸ்சி உறுப்பினராக சேருவதற்கு முன்பு, 1977ம் ஆண்டு முதல் அருணாச்சல பிரதேசம், கோவா, மிசோரம் போன்ற மாநிலங்களில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர். ஆகஸ்ட் 2013 முதல் பிப்ரவரி 2016 வரை டெல்லி காவல்துறை அதிகாரியாக பணியாற்றினார்.

யுபிஎஸ்சியின் ஐந்தாண்டு உறுப்பினர் பதவிக்காலம் வரும் 28ம் தேதியுடன் முடிவடைய உள்ளதால், இவர் புதுச்சேரி ஆளுநராக நியமிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இவரை புதுச்சேரி ஆளுநராக நியமிப்பதில் பல சிக்கல்களும் உள்ளன. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சியுடன் பீம் சைன் பாஸி மோதல் போக்கை கடைபிடித்து வந்தார். இதுமட்டுமல்லாமல், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் (ஜே.என்.யு.எஸ்.யூ) தலைவர் கன்னையா குமார் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், பீம் சைன் பாஸி பெயரும் பெரிய அளவில் அடிபட்டது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் தற்போதைய டெல்லி லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜலுக்குப் பதிலாக, பீம் சைன் பாஸி டெல்லி ஆளுநராக நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், அவ்வாறு நடப்பதற்கு வாய்ப்பில்லை காரணம். தற்போது டெல்லி காவல்துறை ஆணையர் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவாவுக்கும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான பீம் சைன் பாஸிக்கும் ஒத்துவருமா? என்ற சிக்கலும் உள்ளதாக கூறப்படுகிறது. எப்படியாகிலும், புதுச்சேரி ஆளுநராக பீம் சைன் பாஸி நியமிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories:

>