×

அரசு விழா,பாஜக பரப்புரை கூட்டத்தில் பங்கேற்க கோவை வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி..!!

கோவை: அரசு சார்பில் புதிய திட்டங்களை தொடக்கி வைக்கவும் பாஜக பரப்புரை கூட்டத்தில் பங்கேற்கவும் பிரதமர் நரேந்திர மோடி கோவை வந்தடைந்திருக்கிறார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி கோவை விமான நிலையம் வந்தார். கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ரூபாய் 12,400 கோடி மதிப்பிலான திட்டங்களை மோடி தொடங்கி வைக்கிறார். மேலும் முடிவுற்ற  பணிகளை தொடக்கி வைத்து புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். குறிப்பாக நெய்வேலியில் கிட்டத்தட்ட 1000 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலைய திட்டத்தை நாட்டுக்கு அர்பணிக்கிறார். சுமார் 8,000 கோடி இத்திட்டத்திற்கு செலவிடப்பட்டுள்ளது.

இத்திட்டம் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கும் பயனளிக்கும். இத்திட்டத்தின் 65 சதவீத பங்கு தமிழகத்தில் உள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள சூரிய மின்சக்தி திட்டத்தையும் நாட்டுக்கு பிரதமர் அர்பணிக்கவுள்ளார். இந்தியாவின் முக்கியமான துறைமுகமான வ.ஊ.சி. துறைமுகத்தில் அமையவுள்ள ரயில்வே பாலத்தை தொடங்கி வைக்கிறார். இதேபோல் பிரதமரின் வீட்டு வசதி வாரிய திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட குடியிருப்புகளை இன்று தொடங்கி வைக்கிறார்.

தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதமர் மோடி தனது முதல் பரப்புரையை கோவையில் தொடங்கவுள்ளது அரசியல் நோக்கர்களிடையே மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக-வானது தேர்தல் பரப்புரை, ஆலோசனை கூட்டம் என தீவிரம் காட்டி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பியுமான ராகுல்காந்தி தன்னுடைய முதல் பிரச்சாரத்தை கோவையில் துவங்கியிருந்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது பிரதமர் தன்னுடைய முதல் பிரச்சாரத்தை கோவையில் தொடங்குவது பாஜக தொண்டர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Narendra Modi ,Goa ,Government Festival ,BJaka Lobbying Meeting , New project, BJP campaign meeting, Coimbatore, Prime Minister Modi
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...