ஷட்டர்களில் கசிவு, கடும் வெயில் காரணமாக வெம்பக்கோட்டை அணையில் வேகமாக குறையும் நீர்மட்டம்

சிவகாசி: வெம்பக்கோட்டை அணை ஷட்டரில் நீர் கசிவு மற்றும் கடும் வெயில் காரணமாக நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் நெல் அறுவடை நடக்குமா என்று விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் வைப்பாற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையில் முழு கொள்ளளவு 7.5 மீட்டர். வெம்பக்கோட்டை, சூரார்பட்டி, கோட்டைபட்டி, கரிசல்குளம், சல்வார்பட்டி, ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 8 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பில் இந்த அணை நீர் மூலம்  விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது. அத்துடன் சிவகாசி நகராட்சிக்கு இங்கிருந்து தினமும் 25 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்கிறது.

அணையைச் சுற்றியுள்ள பகுதியில் கிணற்று பாசனத்திலும் விவசாய பணிகள் நடக்கிறது. வடகிழக்கு பருவமழையால் 4 மீட்டர் வரை அணைக்கு  நீர் வரத்து இருந்தது. இதன் பின்னர் போதிய மழையில்லாததால் அணை நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.  அத்துடன் அணையின் ஷட்டரில் நீர்கசிவு உள்ளது. முதலாவது ஷட்டரில்  3 இடங்களிலும், 4 வது ஷட்டரில் 2 இடங்களிலும் நீர் கசிந்து கொண்டே இருக்கிறது. அணைக்கு 4 மீட்டர் நீர் வந்ததால்  விவசாயிகள் நெல் சாகுபடி பணியில் ஈடுபட்டனர்.  நெல் பயிர் விளைந்து அறுவடைக்கு  6 மாத காலமாகும். இந்நிலையில் கடும்வெயில், மற்றும் நீர்கசிவு காரணமாக அணைநீர் வேகமாக குறைந்து கொண்டே இருக்கிறது.

மழையும் தொடர்ந்து பெய்யவில்லை. இதனால் நெல் அறுவடை காலம் வரை அணையில்  தண்ணீர் இருக்குமா என்ற அச்சம் விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து  விவசாயி காமராஜ் கூறுகையில், ``வெம்பக்கோட்டை அணை நீராதார பகுதியில் பருவமழை சரிவர பெய்யவில்லை. இதனால் அணைக்கு குறைவான நீர்வரத்து இருந்தது. இருப்பினும் மழை பொழியும் என்ற நம்பிக்கையில் சாகுபடி பணி தொடங்கப்பட்டது. அணை ஷட்டர்களில் லேசான நீர் கசிவு உள்ளது. இதனை அதிகாரிகள் சரி செய்ய வேண்டும். மழையின்றி அணைநீர் வேகமாக குறைந்து வருவதால் நெல் அறுவடை வரை பாசனத்திற்கு நீர் இருக்குமோ என்ற அச்சம் நிலவுகிறது’’ என்றார்.

Related Stories:

>