×

வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட் சிட்டியான வேலூரில் போக்குவரத்தை திணறடிக்கும் வணிக வளாகங்கள்

* வாகனங்கள் நிறுத்த இடமில்லை
* ஆக்கிரமிப்புகளின் அணிவகுப்பு
* பெருகி வரும் வாகனங்கள்

வேலூர்: வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட் சிட்டியான வேலூரில் வாகனங்கள் நிறுத்துமிடம் இல்லாத வணிக வளாகங்களால் முக்கிய வர்த்தக மையங்கள் அமைந்துள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் பெரும் சிக்கலை சந்தித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். பழம் பெருமையும், வரலாற்று சிறப்பும் மிக்கது வேலூர் நகரம். இங்குதான் அன்னிய ஆதிக்கத்தை எதிர்த்து முதல் குரல் ஒலித்தது. இத்தகைய பெருமைமிகு வேலூர் நகரம் 1866ம் ஆண்டு நகராட்சியாக உருப்பெற்றது. நகராட்சியாக இது உருப்பெற்றதற்கு பெரும் வணிக மையமாக இது விளங்கியதுதான் காரணமாக அமைந்தது.

அப்போது வேலூரில் லாங்கு பஜார், நேதாஜி மார்க்கெட், கமிசரி பஜார், மண்டி வீதி, காட்பாடி சாலை பகுதிகளில் அரிசி மண்டிகள், வெல்ல மண்டிகள், நவதானிய மண்டிகள், காய்கறி மண்டிகள், நேதாஜி மார்க்கெட்டில் மளிகை மற்றும் காய்கறி சில்லரை அங்காடிகள், வீட்டு உபயோக பொருட்கள், ஸ்டேஷனரி பொருட்கள் விற்கும் அங்காடிகள் இருந்தன. மெயின் பஜார், பேரி சுப்பிரமணியசுவாமி கோயில் தெரு, சுண்ணாம்புக்கார தெருக்களில் ஜவுளி கடைகளும், நகை, அடகு கடைகளும், சுண்ணாம்பு கடைகளும் அமைந்து இருந்தன. ஆபீசர்ஸ் லைன் என்றும், அண்ணா சாலை என்றும் இப்போது அழைக்கப்படும் சாலை பாரக்ஸ் மைதான் சாலை என்று அழைக்கப்பட்டது.

ஆற்காடு சாலையில் 1900ல் சிஎம்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மட்டும் இருந்தது. ஒரு சில வணிக நிறுவனங்கள் மட்டும் இருந்தன. சுதந்திரத்துக்கு பின்னர் நகரம் படிப்படியாக வளர்ந்து வந்த நிலையில் அண்ணா சாலை, ஆரணி சாலை, பில்டர்பெட் ரோடு, பெங்களூர் சாலை, ஆற்காடு சாலை, ஆசாத் ரோடு என எல்லா சாலைகளிலும், அதை ஒட்டிய தெருக்களிலும் படிப்படியாக வணிக வளாகங்கள் தோன்றின. இப்படி தாறுமாறாக பெருகிய வணிக வளாகங்கள் அனைத்துமே அவற்றுக்கான வாகனங்களை நிறுத்துவதற்கான இடமின்றி கட்டப்பட்ட வணிக வளாகங்கள்தான்.

இதனால் இந்த வணிக வளாகங்களுக்கு இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வரும் வாடிக்கையாளர்களும், வர்த்தக நிறுவனங்கள், கடை உரிமையாளர்கள், ஊழியர்களும் கூட தங்கள் வாகனங்களை சாலையிலேயே நிறுத்தி விட்டு செல்லும் நிலை உள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை இதனால் போக்குவரத்து சிக்கல் இல்லாமல் இருந்தது. ஆனால், தற்போதைய வளர்ச்சியால் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கையும், பொது போக்குவரத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் ஆட்டோக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. வேலூரில் மட்டும் இன்றைய சூழலில் 10 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

இதுபோக கல்வி நிறுவனங்களின் 200க்கும் மேற்பட்ட வாகனங்களும், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட இரண்டு சக்கர வாகனங்களும், சரக்கு லாரிகளும், பஸ்களும் வேலூர் சாலைகளில் ஓடிக் கொண்டிருக்கின்றன. இந்த காரணங்களால் வேலூர் சாலைகள் குறுகி போயின. இது ஒருபுறம் என்றால் வணிக வளாகங்களின் முன்புறம் 5 முதல் 10 அடி வரை சாலையை ஆக்கிரமித்துள்ளதும் நெரிசலுக்கு காரணமாயின. இந்நிலையில், கடந்த 2008ல் 7 பேரூராட்சிகள், ஒரு நகராட்சி, 10 ஊராட்சிகள் இணைந்து வேலூர் நகராட்சி, மாநகராட்சியாக நிலை உயர்ந்தது. அதேபோல் வேலூர் பொற்கோயில், விஐடி பல்கலைக்கழகம்,

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஏற்கனவே இருந்த சிஎம்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையுடன் பெரும் கல்வி நிறுவனங்களும், புறநகர் பகுதிகளில் தொழில் நிறுவனங்களும் நிறைந்து கல்வி, ஆன்மிகம், மருத்துவம், வேலைவாய்ப்பு என்று நாடு முழுவதிலும் இருந்து வரும் மக்களாலும் நெரிசல் மிக்க நகரங்களின் பட்டியலில் வேலூர் இடம் பிடித்தது. இந்த காரணங்களால் கடந்த 10 ஆண்டுகளில் வேலூரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து, தற்போது வேலூர் நகரில் 1 கி.மீ தூரத்தை கடக்க 10 நிமிடங்களுக்கு மேல் ஆகிறது. இதனால் வேலூர் மாநகராட்சி புதிதாக கட்டப்படும் வணிக வளாகங்கள் வாகன நிறுத்துமிடத்துக்கும் சேர்த்து வரைபட அனுமதி கேட்டால் மட்டுமே வழங்குகிறது.

மாநகராட்சியின் இந்த விதியால் வர்த்தக நிறுவனங்கள் பெயருக்கு குறிப்பிட்ட அளவில் இடத்தை மட்டுமே வாகன நிறுத்துமிடமாக காட்டி, ‘சிறப்பு’ கவனிப்புடன் அனுமதி பெற்று வணிக வளாகங்களை கட்டி முடித்துள்ளன. ஏற்கனவே உள்ள வாகன நிறுத்துமிடங்கள் இல்லாத பழைய வணிக வளாகங்கள், லாட்ஜ்கள், தனியார் மருத்துவமனைகள், புதிதாக சிறிய அளவில் வாகன நிறுத்துமிடத்தை காட்டி கட்டப்பட்டுள்ள வணிக வளாகங்கள், லாட்ஜ்கள், தனியார் மருத்துவமனைகள் என இப்போதைக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், லாட்ஜ்கள் என்று கட்டிடங்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இந்த வர்த்தக நோக்கிலான கட்டிடங்கள் அனைத்தும் பாகாயம் தொடங்கி காட்பாடி வரையும், சேண்பாக்கம் தொடங்கி சத்துவாச்சாரி வரையும் நிறைந்துள்ளன. இதனால் சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதும், அணிவகுத்து நிற்பதும் வாகன ஓட்டிகளையும், பொதுமக்களையும் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாக்கி வருவதுடன், அவசர நேரங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்களும் கூட இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி மிதந்து செல்வதுதான் சமூக ஆர்வலர்களை வேதனையடைய வைத்துள்ளது. எனவே, மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வரும் வேலூர் நகரை போக்குவரத்து சிக்கலில் இருந்து மீட்கும் வகையில் பழைய வர்த்தக வளாகங்கள்,

கல்யாண மண்டபங்கள் என பழைய மற்றும் புதிய வணிக வளாகங்களிலும் போதிய அளவில் வாகன நிறுத்துமிடங்களுடன் கட்டிடங்களை மாற்றி அமைக்கவும், புதிதாக அனுமதி ேகட்டு வரும் வணிக வளாக கட்டிடங்களிலும் வாகன நிறுத்துமிடத்தை கவனத்தில் கொண்டு வரைபட அனுமதி வழங்கவும் மாநகராட்சி நிர்வாகம் முடிவெடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கமிஷனர் என்ன சொல்கிறார்?
வாகன நிறுத்துமிடம் இல்லாத வணிக வளாகங்கள் தொடர்பாக கமிஷனர் சங்கரனிடம் கேட்டபோது, ‘இதுதொடர்பாக செயற்பொறியாளரிடம் பேசி ஆய்வு செய்யப்படும்’ என்றார்.

Tags : Vellore , Traffic congestion in Vellore, a fast growing smart city
× RELATED குடிபோதையில் ரகளை செய்ததால்...