பெரம்பலூர் அருகே தனியார் பஞ்சு மில்லில் பயங்கர தீ: ரூ.2 கோடி பருத்தி எரிந்து சாம்பல்

பாடாலூர்: பெரம்பலூர் அருகே தனியார் பஞ்சு மில்லில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான பருத்தி மற்றும் பஞ்சு எரிந்து சேதமானது. பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் கிராமம் அருகே சிறுகன்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமராஜ். இவருக்கு சொந்தமாக பஞ்சு மில் உள்ளது. இங்கு, விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பருத்தியை அரைத்து பஞ்சு தனியாக பிரித்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மில்லில் இருந்து திடீரென தீ பிடித்ததால் தொழிலாளர்கள் அனைவரும் அலறி அடித்து வெளியே ஓடினர்.

தீ கொளுந்து விட்டு எரிந்ததால் பருத்தி மற்றும் பஞ்சு முற்றிலும் எரிந்து சேதமானது. இதன் மதிப்பு ரூ.2 கோடி இருக்கும் எனக்கூறப்படுகிறது. தகவலறிந்த பெரம்பலூர், வேப்பூர், ஸ்ரீரங்கம் பகுதியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 5 மணி நேரம் போராட்டத்திற்கு பின் தீ முற்றிலும் அணைக்கப்பட்டன. இதுகுறித்து பாடாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: