×

டாலர் சிட்டியில் அதிமுகவில் கடும் மல்லுக்கட்டு

கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சியை பிடிக்க உதவிய கொங்கு மண்டலம், தற்போது கவிழ்த்து விடும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். இம்முறை, அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வு பெரும் இழுபறியாக இருக்கும் என்கிறார்கள் அ.தி.மு.க. தொண்டர்கள். கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும், நீலகிரியில் உள்ள மூன்று தொகுதிகளிலும் எந்த தொகுதியை எந்த கட்சிக்கு ஒதுக்குவது? யாருக்கு, எங்கே சீட் கொடுப்பது? என்பதெல்லாம் சுமூகமாக முடியும். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளை ஒதுக்குவதில் கடும் முட்டல், மோதல் ஏற்படும் என்கிறார்கள்.

திருப்பூர் மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகளுக்குள் முன்பு இருந்த ஒருங்கிணைப்பும், கட்சி விசுவாசமும் இப்போது இல்லை. அதற்கு காரணம், ஜெயலலிதா மறைவு மற்றும் சீனியர்கள் பலரும் ஆளுக்கொரு திசையில் பயணிப்பதுதான். பொள்ளாச்சியில் நிலைமை சரியில்லாமல் இருப்பதால், அங்கு தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும் பொள்ளாச்சி ஜெயராமன், இம்முறை திருப்பூர் வடக்கில் போட்டியிடுவார் என்று ஒரு தகவல் பரவுகிறது. இதே தொகுதிக்கு, கட்சியின் சீனியர்களான சிவசாமியும், முன்னாள் அமைச்சர் ஆனந்தனும் முட்டி மோதுகிறார்கள். சிட்டிங் எம்.எல்.ஏ. விஜயகுமாரும் ரேஸில் உள்ளார்.

இம்மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், இம்முறை மீண்டும் உடுமலையில் நின்றால், கண்டிப்பாக தோற்றுவிடுவார் என உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளது. அதனால் அவரும், திருப்பூரை நோக்கி பயணத்தை துவக்கியுள்ளார். பல்லடம் தொகுதியை இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியத்தின் மகனுக்கு, பாரதிய ஜனதா கேட்கிறது. அதனால் அந்த தொகுதியிலும், திருப்பூர் தெற்கு தொகுதியிலும் சிட்டிங் எம்.எல்.ஏ.க்களுக்கு சீட் கிடைப்பது கடினம்தான் என்கிறார்கள். அவினாசி தொகுதியில் சபாநாயகர் தனபாலுக்கு பதிலாக அவருடைய மகனுக்கு சீட் கேட்கிறார்கள். ஆனால், தனபால் அளவுக்கு, அவரது மகனுக்கு வேலை பார்க்க இயலாது என கைவிரிக்கிறார்கள் கட்சி தொண்டர்கள்.


Tags : Dollar City , Heavy wrestling at the top in Dollar City
× RELATED வேலையில்லா திண்டாட்டத்தால் வட மாநில தொழிலாளர்கள் வருகை அதிகரிப்பு