×

விஜய் ஹசாரே டிராபி: தமிழகம் மீண்டும் ஏமாற்றம்

இந்தூர்: விஜய் ஹசாரோ கோப்பை ஒருநாள் போட்டித் தெடரின் எலைட் பி பிரிவு லீக் சுற்றில் தமிழ்நாடு அணி 14 ரன் வித்தியாசத்தில் மத்தியப் பிரதேசத்திடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இந்தூரில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற தமிழ்நாடு பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய மத்தியப் பிரதேசம் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து திணறியது. வெங்கடேஷ் அய்யர் 22, சுபம் சர்மா 33,  ஆதித்யா வஸ்தவா 46, கேப்டன் பார்த் சகானி 46, அர்ஷத் கான் 20 ரன்னில் ஆட்டமிழந்தனர். அதற்கு பிறகு வந்தவர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, மத்தியப் பிரதேசம் 48.2 ஓவரில் 225 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. தமிழ்நாடு பந்துவீச்சில் முகமது 3, ரகுபதி சிலம்பரசன் 2, அபராஜித், கவுசிக், சோனு யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

அதனையடுத்து 50 ஓவரில் 226 ரன் எடுத்தால் வெற்றி என்ற சற்றே எளிய இலக்குடன் தமிழகம் களம் கண்டது.   ஜெகதீசன்  27, பாபா இந்திரஜித் 32, கேப்டன் தினேஷ் கார்த்திக் 37, பாபா அபராஜித் 21 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். 8வது வீரராகக் களமிறங்கிய ஷாருக் கான் மட்டும் பொறுப்பாக விளையாடி அரைசதம் விளாசினார். மற்றவர்கள் சொற்ப ரன்னில் வெளியேற தமிழ்நாடு 49 ஓவரில் எல்லா விக்கெட்டையும் இழந்து 211 ரன் மட்டுமே எடுத்து 14 ரன் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. அதிரடியாக விளையாடிய ஷாருக் கான் 67 ரன் (77 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பரபரப்பான கடைசி கட்டத்தில் சாய் கிஷோர் (5), சிலம்பரசன் (2) இருவரும் ரன் அவுட்டானது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இவர்கள் பொறுப்புடன் கம்பெனி கொடுத்திருந்தால், வெற்றிக்குத் தேவையான ரன்களை ஷாருக் விளாசியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்தியப் பிரதேசம் தரப்பில் கவுரவ் யாதவ், மிகிர் ஹிர்வானி தலா 2, அர்ஷத்கான், குமார் கார்த்திகேயா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.  தமிழக வீரர்கள் 4 பேர் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தனர்.இது தமிழ்நாடு அணிக்கு 2வது தோல்வியாகும். ஏற்கனவே ஆந்திர அணியிடம் தோற்றுள்ளது. அதனால் எலைட் பி பிரிவு லீக் சுற்றில் 3 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. எஞ்சி உள்ள 2 போட்டிகளில் அதிக ரன்/விக்கெட் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதை தமிழ்நாடு நினைத்துப் பார்க்க முடியும்.

Tags : Tamil Nadu , Vijay Hazare Trophy: Tamil Nadu disappointed again
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...