அதிமுகவில் விருப்ப மனுதாக்கல் தொடங்கியது இபிஎஸ் எடப்பாடியிலும், ஓபிஎஸ் போடியிலும் போட்டி: முதல்நாளில் 1,100 பேர் மனு வாங்கினர்

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் விருப்ப மனு தாக்கல் நேற்று தொடங்கியது. இபிஎஸ் எடப்பாடி தொகுதியிலும், ஓபிஎஸ் போடி தொகுதியிலும் போட்டியிட மனு தாக்கல் செய்தனர். முதல் நாளில் 1,100க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு வாங்கினர். தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் இறுதியில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடக்கிறது. இதையடுத்து தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில், அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை 24ம் தேதி (நேற்று) முதல் வரும் மார்ச் 5ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் பெறலாம் என்று அதிமுக தலைமை கழகம் சார்பில் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் ரூ.15 ஆயிரமும், புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறவர்கள் ரூ.5 ஆயிரமும், கேரள மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறவர்கள் ரூ.2 ஆயிரமும் கட்டணம் செலுத்தி விருப்ப மனுக்களை பெறலாம் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த விருப்ப மனுவுக்கான விண்ணப்ப படிவங்களை பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் தெளிவாக பூர்த்தி செய்து, மீண்டும் தலைமை கழகத்தில் வழங்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு நேற்று காலை 10 மணி முதல் விருப்ப மனு வழங்கப்பட்டது. முதல் நபராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் விருப்ப மனுவை வாங்கி பூர்த்தி செய்து வழங்கினர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்ப மனு அளித்தார். அதேபோன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றிபெற்ற தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்ப மனு வழங்கினார்.

இதுபோல, அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.விஜயபாஸ்கர், தங்கமணி, வேலுமணி ஆகியோர் தற்போது போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதியில் மீண்டும் போட்டியிட மனு வழங்கினர். தூத்துக்குடி முன்னாள் எம்எல்ஏ வி.பி.ஆர்.ரமேஷ், ராதாபுரம் இன்பதுரை, மயிலாப்பூர் நட்ராஜ் மற்றும் கணேஷ்பாபு உள்ளிட்ட ஏராளமானோர் விருப்ப மனுக்களை ஆர்வமுடன் வாங்கினர். முதல் நாளான நேற்று மட்டும் 1,100க்கும் மேற்பட்டவர்கள் அதிமுக சார்பில் போட்டியிட மனு வாங்கியுள்ளனர்.

Related Stories:

>