×

மோதிரா ஸ்டேடியத்துக்கு மோடியின் பெயர்: கிரிக்கெட்டில் புகுந்து விளையாடும் அரசியல்: மும்பையில் இருந்து இடம்பெயர்கிறதா பிசிசிஐ?

அகமதாபாத்தில் மிகப் பிரம்மாண்டமாய் விஸ்வரூபமெடுத்து நிற்கிறது மோதிரா மைதானம்... இல்லை சர்தார் படேல் அரங்கம்... இல்லை இல்லை நரேந்திர மோடி ஸ்டேடியம்! இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி, உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமாக உருவாகி உள்ள அகமதாபாத் அரங்கில் நேற்று தொடங்கியது. அதற்கு முன்பாக, சுமார் ₹800 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள இந்த ஸ்டேடியத்தை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மோதிரா ஸ்டேடியமாக இருந்து சர்தார் படேல் ஸ்டேடியமாக பெயர் மாற்றம் செய்யப்பட்ட அரங்கு இனி ‘நரேந்திர மோடி ஸ்டேடியம்’ என அழைக்கப்படும் என்று அறிவித்தது யாரும் எதிர்பாராதது என்றே சொல்ல வேண்டும். ‘இது பிரதமர் மோடியின் கனவு திட்டம். அவர் குஜராத் முதல்வராகவும், அம்மாநில கிரிக்கெட் சங்கத் தலைவராகவும் இருந்த போதே அகமதாபாத்தில் இப்படி உலகமே வியந்து பார்க்கும் வகையிலான ஸ்டேடியத்தை உருவாக்க வேண்டும் என திட்டமிட்டார். அந்த கனவு இன்று நனவாகி இருக்கிறது’ என்ற ஷாவின் விளக்கமும் ஏற்றுக்கொள்ளக் கூடியது தான்.

ஆனால், சர்தார் படேல் பெயரை தூக்கி வீசிவிட்டு மோடியின் பெயர் சூட்டப்பட்டதுதான் விவாதப் பொருளாகி இருக்கிறது. இவர்கள் எதையுமே விட்டுவைக்க மாட்டார்களா என்று வழக்கம்போல சமூக வலைத்தளங்களில் வார்த்தைப் போர் வெடித்திருக்கிறது. இந்த பிரமாண்ட ஸ்டேடியம் அகமதாபாத்தில் உருவானது, உள்துறை அமைச்சரின் மகன் ஜெய்ஷா கிரிக்கெட் வாரியத்தின் செயலராக இருப்பது, உலகின் பணக்கார விளையாட்டு அமைப்பாக... சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலையே ஆட்டிப்படைக்கும் அதிகாரம் கொண்டதாக இருக்கும் பிசிசிஐ நிர்வாகத்தில் அரசியல் ஆக்டோபசின் கரங்கள் புகுந்து விளையாடத் தொடங்கிவிட்டதையே காட்டுகிறது என்கிறார்கள் சிலர். 1928 டிசம்பரில் தமிழகத்தில் கூட்டுறவு சங்கமாகப் பதிவாகி, சுதந்திர இந்தியாவில் மாநில கிரிக்கெட் சங்கங்களை கட்டுப்படுத்தும் வாரியமாக உருமாறி, மும்பை வாங்கடே ஸ்டேடிய வளாகத்தி ஓங்கி உயர்ந்து வளர்ந்து நிற்கும் பிசிசிஐ ஆலமரத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி அகமதாபாத்துக்கு மாற்றப் போகிறார்கள் என்றும் பேச்சு அடிபடுகிறது.

டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக அமெரிக்க பாடகி ரிஹானா ட்வீட் செய்தபோது, முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்கள் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி உட்பட பலரும் பொங்கி எழுந்து தேசபக்தியோடு எதிர் கருத்துகளை பதியவைத்ததையும் சுட்டிக் காட்டுகிறார்கள். ஸ்டேடியத்துக்கு மட்டும் தான் மோடியின் பெயரை வைத்திருக்கிறோம். அகமதாபாத் விளையாட்டு வளாகம் சர்தார் படேல் பெயரிலேயே நீடிக்கும் என்ற மத்திய அரசின் விளக்கமும் சப்பைக்கட்டாகவே பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் படேல் பெயரை கேவலப்படுத்திவிட்டார்கள் என்று காங்கிரஸ் தரப்பில் இருந்து காட்டமான விமர்சனங்கள் பறக்கின்றன. கூட்டிக் கழித்துப் பார்த்தால் இதில் ஏதோ ‘பெரிய திட்டம்’ இருப்பதாகவே தோன்றுவதை தவிர்த்திருக்கலாம்.

ஜெய் ஷாவும் கிரிக்கெட்டும்!
பிசிசிஐ செயலராக உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா பொறுப்பேற்றபோதும் சர்ச்சை வெடித்தது. கிரிக்கெட்டுக்கும் ஜெய் ஷாவுக்கும் என்னய்யா சம்பந்தம் என்று ஏகத்துக்கு கலாய்த்தார்கள். அதிகாரம் மிக்கவரின் மகன் என்பதாலேயே இது சாத்தியமாகி இருப்பதாக நெட்டிசன்கள் பொங்கினார்கள். அப்போதும் சவுரவ் கங்குலி தான் முட்டுக் கொடுத்தார். ‘இதில் என்ன தவறு இருக்கிறது. அவரை அமித் ஷாவின் மகனாகப் பார்க்காதீர்கள். அவர் தேர்தலில் போட்டியிட்டு வென்றிருக்கிறார். குஜராத் கிரிக்கெட் சங்க நிர்வாகத்தில் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இருக்கிறது. சக்திவாய்ந்த நபர்களின் பிள்ளைகள் என்பதால் அவர்கள் எந்த துறையில் நுழைந்தாலும் எதிர்ப்பு தெரிவிப்பது இந்தியாவில் வழக்கமாகிவிட்டது. சச்சின் மகன் அர்ஜுன் கிரிக்கெட் விளையாடக் கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை’ என்று கங்குலி ஆதரவுக் குரல் எழுப்பினார்.

என்னிடம் பயிற்சி பெற்றபோது ஜெய் ஷா மிக ‘டீசன்டான பேட்ஸ்மேன்’ என்று குஜராத் முன்னாள் பயிற்சியாளர் ஜெயேந்திர செஹல் சான்றிதழ் அளித்ததாக ‘அகமதாபாத் மிரர்’ செய்தி வெளியிட்டது உச்சக்கட்ட தமாஷ்.
எவ்ளோ பணம் விளையாடுது... இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) இன்றைய மதிப்பு ₹15,000 கோடிக்கும் அதிகம். உலகிலேயே இவ்வளவு அதிக சொத்து கொண்ட வேறு விளையாட்டு நிர்வாக அமைப்பு இல்லை. இதனால் தான் பிசிசிஐ நிர்வாகத்தில் அரசியல் புகுந்து ஆதிக்கம் செலுத்துகிறது. இந்தியா விளையாடும் போட்டிகளின் நேரடி ஒளிபரப்பு விவகாரங்கள் பிரசார் பாரதி கட்டுப்பாட்டில் இருந்த வரை கிரிக்கெட் வாரியம் சவலைக் குழந்தையாகவே இருந்தது. தூர்தர்ஷனை ஓரங்கட்டி, ஒளிபரப்பு உரிமத்தை விற்கத் தொடங்கியதில் இருந்து பிசிசிஐ காட்டில் அடை மழை தான். உலகின் பணக்கார விளையாட்டு நிர்வாகமாக பிசிசிஐ மாற இது தான் முக்கிய காரணம். ஐபிஎல் வந்த பிறகு லெவலே வேறாகிவிட்டது.

அம்பானி, அதானி பெயரில்
நரேந்திர மோடி ஸ்டேடியத்தின் இரண்டு பெவிலியன்களுக்கும் ‘ரிலையன்ஸ் முனை’ மற்றும் ‘அதானி முனை’ என்று பெயரிட்டிருப்பதும் சமூக வலைத்தளங்களில் கடுமையான பேசுபொருளாக மாறியிருக்கிறது. ஏற்கனவே மோடி அரசு கார்ப்பரேட்டுகளின் கைப்பாவை என விமர்சனம் உள்ள நிலையில்... அம்பானி, அதானி பெயர்களை சூட்டியிருப்பது ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்பது போல இருக்கிறது. ஓவர்நைட்டில் ஒபாமா ரேஞ்சுக்கு டிரெண்டிங்காகி இருக்கும் இந்த விஷயத்தால் மீம்ஸ் கிரியேட்டர்கள் பரபரக்கிறார்கள்.



Tags : Modi ,Mothira Stadium ,BCCI ,Mumbai , Modi's name for Mothira Stadium: The politics of infiltration in cricket: Is the BCCI moving out of Mumbai?
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...