வேளாண் சட்டங்களை திரும்ப பெறாவிட்டால் நாடாளுமன்றத்தை நோக்கி 40 லட்சம் டிராக்டர் பேரணி: விவசாய சங்கங்கள் எச்சரிக்கை

புதுடெல்லி: ‘புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறாவிட்டால் 40 லட்சம் டிராக்டர்களில் நாடாளுமன்றத்தை நோக்கி  பேரணி நடத்தப்படும்,’ என விவசாய சங்கங்கள் எச்சரித்துள்ளன. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் கடந்த 3 மாதங்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் ஜனவரி 22ம் தேதி மத்திய அரசு நடத்திய 11ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. இச்சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டாலும் விவசாயிகள் நேற்று 91வது நாளாக தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.  

இந்நிலையில், ராஜஸ்தானில் உள்ள சிகாரில் நேற்று விவசாயிகள் பேரணி நடந்தது. இதில், பாரதிய கிசான் சங்க தலைவர் ராகேஷ் திகாய்த் பேசுகையில், “எங்களின் அடுத்த அழைப்பு நாடாளுமன்றம் நோக்கிய பேரணிக்குதான். இந்த முறை 4 லட்சம் டிராக்டர்கள் கிடையாது. வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்படா விட்டால் 40 லட்சம் டிராக்டர்கள் நாடாளுமன்றம் நோக்கி செல்லும்,’’ என்றார். இந்நிலையில், டெல்லியில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நேற்று அளித்த பேட்டியில், ‘‘விவசாயிகள், வேளாண் துறை நலனில் அரசு அக்கறை கொண்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கவும், இந்திய விவசாய துறையை வலுப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு எப்போதும் தயாராகவே இருக்கிறது,” என்றார்.

Related Stories:

More
>