×

முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆவேசம்: தமிழகத்துக்கு காவிரி நீரை கூடுதலாக தர மாட்டோம்

பெங்களூரு: ‘கர்நாடகா விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருக்கும் காவிரி நீரை கூடுதலாக தமிழகத்துக்கு தரமாட்டோம்,’ என்று முன்னாள் பிரதமரும், மஜத தேசிய தலைவருமான எச்.டி.தேவகவுடா தெரிவித்தார். மத்திய அரசு பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்த்தியுள்ளதை திரும்ப பெற வலியுறுத்தி பெங்களூருவில் தேவகவுடா தலைமையில் நேற்று போராட்டம் நடந்தது. இதில் அவர் பேசியதாவது: மத்திய அரசு பெட்ரோலிய பொருட்களின் விலையை விண்ணளவுக்கு உயர்த்தி வருவதால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இதனால், சமானிய ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த குடும்பத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களின் உரிமை குரலாக நான் தெருவுக்கு வந்து போராட்டம் நடத்தி வருகிறேன். 2023ல் நடக்கும் சட்டப்பேரவை தேர்தல் வரை இந்த போராட்டம் தொடரும். மத்தியில் ஆளும் பாஜ அரசு, கர்நாடகாவுக்கு அநியாயம் செய்து வருகிறது.

குறிப்பாக, காவிரி நீர் பங்கீட்டு விஷயத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்காமல் காலம் கடத்தி வருகிறது. அதே நேரத்தில், காவிரியில் இருந்து கூடுதலாக கிடைக்கும் 45 டிஎம்சி தண்ணீரை பயன்படுத்தி கொண்டு காவிரி-வைகை-குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்தையும் தமிழக அரசு தொடங்கியுள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடப்பதால், அதற்கு சலுகைகளை வாரி வழங்கி வரும் மத்திய அரசு, கர்நாடகாவை வஞ்சித்து வருகிறது. காவிரி நீர் பங்கீட்டு விஷயத்தில் மாநில விவசாயிகளுக்கு அநியாயம் நடக்க ஒருபோதும் விட மாட்டோம். எனது மூச்சு இருக்கும் வரை போராடுவேன். தமிழக அரசின் நதிகள் இணைப்பு திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது. இது தொடர்பாக நானே பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்துவேன். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Former ,PM ,Devagauda ,Tamil Nadu , Former PM Devagauda outraged: We will not give extra Cauvery water to Tamil Nadu
× RELATED ஐதராபாத்தில் பேருந்து சேவை குறைப்பு!!