×

வாணியம்பாடி அருகே தோப்புக்குள் பதுங்கல் சிறுத்தையை கண்டறிய 2 வனக்குழுக்கள் அமைப்பு

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே தோப்புக்குள் பதுங்கியுள்ள சிறுத்தையை கண்டறிய 2 வனக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சென்னம்பேட்டை அருகே உள்ள பங்களா தோப்பு பாலாற்றுப்படுகை ஓரம் ஜெயராமன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இங்கு அதே பகுதியை சேர்ந்த மல்லிகா, சம்பூர்ணம் ஆகியோர் நேற்று வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு சிறுத்தையை நாய்கள் துரத்தி சென்றதை பார்த்து இருவரும் அதிர்ச்சியடைந்தனர். இதையறிந்த அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தபோது அங்குள்ள தென்னந்தோப்பு புதருக்குள் சிறுத்தை மறைந்துகொண்டது.

இதுகுறித்து பொதுமக்கள் ஆலங்காயம் வனத்துறையினர் மற்றும் வாணியம்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனவர் செங்குட்டுவன் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் டிஎஸ்பி பழனிசெல்வம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்பகுதியில் பதிவாகியிருந்த சிறுத்தையின் கால்தடத்தை ஆய்வு செய்தனர். மேலும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால், பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என சுற்றுப்புற கிராமங்களில் தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டது.

இதேபோல் மாவட்ட உதவி வன பாதுகாவலர் ராஜ்குமார், திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் பிரபு ஆகியோர் வனத்துறை  அதிகாரிகளிடம் விசாரித்தனர். சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிய 2 வனத்துறை அதிகாரிகள் குழுவை நியமித்து உத்தரவிட்டனர். அவர்கள் இன்று காலை பங்களாமேடு தோப்பு பகுதிக்கு சென்று, சிறுத்தை பதுங்கியுள்ளதாக கூறப்படும் தென்னந்தோப்பு பகுதியில் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் கிராம மக்களிடமும் விசாரித்து சிறுத்தையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிக்கனாங்குப்பம் பகுதியில் சிறுத்தை தாக்கி 6 பேர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் மீண்டும் தற்போது சிறுத்தை நடமாட்டம் தொடங்கியுள்ளதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Tags : 2 Wildlife Organisation ,Vannyambati , 2 forest teams set up to find leopard lurking in a grove near Vaniyambadi
× RELATED வாணியம்பாடி அருகே பைனான்சியரை தாக்கி ரூ.25 லட்சம் வழிப்பறி