வெனிசுலா, ஈரான் போன்ற நாடுகளில் பெட்ரோல் லிட்டர் ரூ.2, ரூ.3, ரூ.4க்கு கிடைக்குது!: இந்தியாவில் விலையை கேட்டால் கண்ணீர் தான் மிச்சம்

புதுடெல்லி: வெனிசுலா, ஈரான் போன்ற நாடுகளில் பெட்ரோல் விலை ரூ. 2 முதல் விற்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் லிட்டர் ரூ.100 தாண்டிய நிலையில் வாகன ஓட்டிகள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்தியாவில் பெட்ரோல் விலை இதுவரை இல்லாத வகையில் லிட்டர் ரூ. 100 எட்டியுள்ளது. ராஜஸ்தான் உள்ளிட்ட 3 மாநிலங்களில் லிட்டர் ரூ. 100க்கு விற்கப்படுகிறது. பெட்ரோல் விலை உயர்வு குறித்து மத்திய அரசு கைவிரித்த நிலையில்,  மாநில அரசுகள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. பெட்ரோல் விலை தொடர்பாக சமூக வலைதளங்களில் வரும் மீம்ஸ்கள், கவலையிலும் சிரிப்பை ஏற்படுத்துகின்றன.

ஆனால், பல நாடுகளில் பெட்ரோல் விலை மிகக் குறைவான விலைக்கே கிடைக்கிறது. உலகெங்கிலும் உள்ள நாடுகளில் விற்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை www.globalpetrolprices.com/gasoline_prices/ என்ற இணையதளத்தில் காணப்படுகிறது. அதில், உலகிலேயே மிகக் குறைந்த விலையில் பெட்ரோல் கிடைக்கும் நாடாக லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுலா உள்ளது. இந்த நாட்டில் பெட்ரோல் விலை லிட்டர் இந்திய ரூபாயில் 1.45 காசுக்கு விற்கப்படுகிறது. வெனிசுலா நாட்டை தொடர்ந்து ஈரானில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ. 4.39 ஆக விற்கப்படுகிறது. வெனிசுலா மற்றும் ஈரானுக்கு அடுத்தபடியாக, மலிவான பெட்ரோலை விற்பனை செய்யும் நாடுகள் பட்டியலில் அங்கோலா உள்ளது.

அங்கு, லிட்டர் ரூ.17.77க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைத் தொடர்ந்து அல்ஜீரியா (ரூ. 25.032), குவைத் (ரூ. 25.133), சூடான் (ரூ. 27.407), கஜகஸ்தான் (ரூ. 29.657), கத்தார் (ரூ. 29.825), துர்க்மெனிஸ்தான் (ரூ. 31.084), நைஜீரியா (ரூ. 31.568) என்ற விலையில் விற்கப்படுகிறது.உலக நாடுகளின் நிலவரம் இவ்வாறு இருக்க இந்தியாவின் அண்டை நாடுகளிலும் மலிவான விலையில் பெட்ரோல் விற்கப்படுகிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்த நாடுகள் யாவும் பொருளாதார ரீதியாக பலவீனமான நாடுகளாகும்.

 இந்த பட்டியலில் நேபாளம், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன. சீனாவில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ .77.022, பாகிஸ்தானில் லிட்டர் ரூ.51.119, இலங்கையில் ரூ.60.452, நேபாளத்தில் ரூ.69.054, பூட்டானில் ரூ.49.564 என்ற  அடிப்படையில் விற்கப்படுகிறது. ஆனால், 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் மட்டும் லிட்டர் ரூ.100 தாண்டிவிட்டது. இந்தியாவின் நிலை இப்படி என்றால், நமக்கு அண்ணன் நாடுகளும் அதிகம் உள்ளன. அந்த பட்டியலில் உலகிலேயே அதிகபட்ச விலையை நிர்ணயம் செய்துள்ள நாடு ஹாங்காங். அங்கு பெட்ரோல் விலை லிட்டர் ரூ.175க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>