பிப்.27ல் அழகர் கோவில் தெப்பத்திருவிழா

அலங்காநல்லூர்: வரும் 27ம் தேதி அழகர்கோயில் தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது. மதுரை மாவட்டம், அழகர்கோவில் தெப்பத்திருவிழா ஆண்டுதோறும் நிறை பவுர்ணமி நாளில் மாசிமகத்தன்று நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு தெப்பத்திருவிழா வரும் 27ல் நடைபெறுகிறது. முன்னதாக வரும் 26ம் தேதி மாலை கஜேந்திர மோட்சம் நடைபெறும். 27ம் தேதி சனிக்கிழமை காலை 7 மணிக்கு ஸ்ரீ தேவி, பூதேவி, சமேத சுந்தரராஜ பெருமாள் என்ற கள்ளழகர் பல்லக்கில் புறப்பாடாகி தீவட்டி பரிவாரங்களுடன் மேளதாளம் முழங்க வழிநெடுகிலும் பக்தர்கள் வெள்ளத்தில்  மண்டுக தீர்த்தம் எனும் பொய்கைக்கரைப்பட்டி புஷ்கரணிக்கு செல்கிறார்.

பின்னர் 10.30 மணிக்கு மேல் 12.30. மணிக்குள் தெப்பத்திற்கு சென்று அலங்கார மண்டபத்தில் தேவியர்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தொடர்ந்து பரிவாரங்களுடன் மீண்டும் கோயிலுக்கு சென்றடைகிறார். இத்துடன் தெப்பத்திருவிழா உற்சவம் நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், கோயில் நிர்வாக அதிகாரி அனிதா, கண்காணிப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

கோயில் நிர்வாகத்தினர் மெத்தனம்

கோயில் நிர்வாகத்தின் மெத்தனம் காரணமாக கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக பொய்கைக்கரைப்பட்டி குளத்தில் தண்ணீரின்றி திருவிழா நடந்து வருகிறது. குளத்திற்கு தண்ணீர் வரும் நீர்வரத்து கால்வாய்களை சீரமைக்காததால், கனமழை மற்றும் புயல் காலத்திலும் கூட இந்த குளம் நிரம்பாமல் காணப்படுகிறது. அழகர் கோவில் நிர்வாகத்தின் தொடர்மெத்தனம் காரணமாக, இந்த ஆண்டும் தெப்பத்தில் தண்ணீரின்றி திருவிழா நடைபெறும் சூழல் உள்ளது. இதனால் பக்தர்கள் வேதயடைந்துள்ளனர்.

Related Stories:

>