×

சிவசேனா கூட்டணியில் உள்ள எம்எல்ஏக்கள் தாமரையை நாடும் புதுச்சேரி வண்டுகள் அல்ல!: மகாராஷ்டிராவை குறிவைக்கும் பாஜகவுக்கு எச்சரிக்கை

மும்பை: சிவசேனா கூட்டணியில் உள்ள எம்எல்ஏக்கள், தாமரையை நாடும் புதுச்சேரி வண்டுகள் போன்றவர்கள் அல்ல என்று, சிவசேனா கட்சி பாஜகவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்தியில் ஆளும் பாஜக பல மாநில அரசுகளை  கலைத்துள்ள நிலையில், சமீபத்தில் புதுச்சேரியில் ஆட்சி நடத்தி வந்த காங்கிரஸ் அரசையும் வீழ்த்தியது. புதுச்சேரியை தொடர்ந்து மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணியை உடைத்து   ‘ஆபரேஷன் லோட்டஸ்’ திட்டத்தை தொடங்க உள்ளதாக வடமாநில ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக பாஜகவுக்கு சிவசேனா விடுத்துள்ள நேரடி எச்சரிக்கை அறிக்கையில், ‘புதுச்சேரி கனவு நிறைவேறியதால், இப்போது மகாராஷ்டிரா பக்கம் சிலரது பார்வை விழுந்துள்ளது. அது அவர்களின் கனவாக மட்டுமே இருக்க வேண்டும்.
மகாராஷ்டிரா கூட்டணி மிகவும் வலுவானது. அதன் நோக்கங்கள் உறுதியானவை. புதுச்சேரியில் நடத்திய விளையாட்டுக்கள் மகாராஷ்டிராவில் பலிக்காது. புதுச்சேரியில் முதல்வர் பதவியில் இருந்த நாராயணசாமியின் ஆட்சியை ஆதரித்த  ஐந்து தவளைகளைக் கொன்று, அவரது அரசை சிறுபான்மை அரசாக மாற்றினர். மேற்கண்ட ஐந்து எம்எல்ஏக்களும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை நான்கரை ஆண்டுகளாக ஆதரித்தனர்.

ஆனால் இப்போது இந்த எம்எல்ஏக்கள் அனைவரும் தாமரை நாடும் வண்டுகளாக மாறிவிட்டனர். அடுத்ததாக புதுச்சேரியில் பேரவை தேர்தல் முடிந்து புதிய அரசு அமைவதற்கு நான்கு மாதங்கள் வரை எடுக்கும். அதுவரை, புதுச்சேரியை பாஜக  அல்லது மத்திய அரசு தனது கட்டுக்குள் கொண்டு வரும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் - ஏப்ரல் மாதத்தில் ‘ஆபரேஷன் லோட்டஸ்’ மகாராஷ்டிராவில் நடக்கும் என்று சில பாஜக தலைவர்கள் கூறுகின்றனர். மத்திய பிரதேசத்தில்  காங்கிரஸ் அரசை வீழ்த்திய போது அடுத்த அடி மகாராஷ்டிரா மீது தான் என்றனர்.

புதுச்சேரியில் ஆட்சியை கவிழ்க்க மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் மகாராஷ்டிராவிலும் செய்தனர். புதுச்சேரி துணை ஆளுநர் கிரண் பேடி, நாராணசாமியின் அரசை செயல்பட அனுமதிக்கவில்லை. புதுச்சேரி ஒரு யூனியன்  பிரதேசமாக இருப்பதால், அதன் அதிகாரம் ஆளுநரின் கையில் உள்ளது. முதல்வர் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் கிரண்பேடி எதிர்த்தார். டெல்லியில் இருந்து வரும் உத்தரவின் அடிப்படையிலேயே அவர் செயல்பட்டார்.

ஆளுநர் என்பவர் உணவில் பயன்படுத்தும் கறிவேப்பில்லை போன்றவராக பார்க்கப்படுகிறார். அதன்படி, கிரண் பேடியும் கறிவேப்பிலையாக பயன்படுத்தப்பட்டு பின்னர் தூக்கி எறியப்பட்டுள்ளார். மாநில அரசின் மீதுள்ள எதிர்ப்பை வெளிப்படுத்த  மத்தியில் இருப்பவர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்துவது துணிச்சலான விஷயம் என்று சிலர் நினைப்பது தவறு. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாராயணசாமி தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்? ஆனால் கடந்த எழுபது ஆண்டுகளில் என்ன  நடந்துள்ளது என்பதை உணரவேண்டும். கொள்கையையும், ஒழுக்கத்தையும் போர்த்திக்கொண்டு அதிகாரத்தை கைப்பற்றி எல்லை மீறுவது சரியல்ல’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Shivuchena Alliance ,Bhāgavu ,Maharashtra , Puducherry beetles are not lotus-seeking Shiv Sena MLAs: BJP warns Maharashtra
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...