×

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நாராயணசாமி ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து என்ன நிகழப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில், நமச்சிவாயம் உள்ளிட்ட காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒரு திமுக சட்டமன்ற உறுப்பினர் என 6 பேர் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். தொடர்ந்து, சட்டசபையில் மொத்த எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 28 ஆக குறைந்தது. இதையடுத்து சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முதலமைச்சருக்கு தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டார். நேற்று முன்தினம் சட்டசபை சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது. அப்போது அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் தோல்வி அடைந்தது.

இதனால் முதலமைச்சர் நாராயணசாமி தனது தனது பதவியை ராஜினாமா செய்தார். முதலமைச்சர் நாராயணசாமியின் ராஜினாமாவை ஜனாதிபதியும் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து புதுச்சேரியில், குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்த வேண்டும் என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பரிந்துரை செய்திருந்தார். தமிழிசையின் பரிந்துரையை ஏற்று புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சியை பரிந்துரைப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. காலை 10:30 மணிக்கு நடைபெற்ற இந்த அமைச்சரவை கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

தற்போதைய சூழலில் புதுச்சேரி மாநிலத்தில் யாரும் ஆட்சி அமைக்க உரிமை கோராத பட்சத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது தான் சரியானதாக இருக்கும் என்று மத்திய அமைச்சரவை முடிவு செய்தது. இந்நிலையில், புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாராயணசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததையடுத்து குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Cabinet ,President of the Republic , Puducherry, President Ad, Amal, Union Cabinet
× RELATED உலக ஹோமியோபதி தினத்தை முன்னிட்டு...