மேலூர் அருகே நெல் கொள்முதல் தாமதத்தால் அச்சம்

மேலூர் : மேலூர் அருகே நெல் கொள்முதல் தாமதத்தால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.மேலூர் அருகே வெள்ளலூர் மந்தையில் அரசு கொள்முதல் நிலையம் உள்ளது. அங்குள்ள மந்தை முழுவதும் விவசாயிகள் நெல்களை மூடைகளாகவும், தரையிலும் கொட்டி வைத்தும் உள்ளனர். இவற்றை எடை போட்டு, சாக்கு மூட்டைகளில் கட்டி, லாரிகளில் ஏற்ற வேண்டும். அதன்பிறகே விவசாயிகளுக்கு குறிப்பிட்ட நாள் கழித்து பணம் பட்டுவாடா நடக்கும். ஆனால் பல நாட்களாக நெல் கொள்முதல் செய்யாமலேயே மந்தையில் தேங்கி உள்ளது.

இதனால் தங்கள் நெல்லுக்கு இரவில் அந்தந்த விவசாயிகளே காவல் இருந்து காப்பாற்றும் நிலை உள்ளது. திடீரென கோடை மழை பெய்து விட்டால், அனைத்து நெல்லும் பாழாகி விடும் ஆபத்து உள்ளது என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து கொள்முதல் நிலைய அலுவலர்கள் தரப்பில் கேட்ட போது, ‘நெல்லை எடை போட்டு, சாக்கில் கட்டுவதற்கு போதிய வேலை ஆட்கள் உள்ளனர். ஆனால் நெல் மூட்டைகளை ஏற்றி செல்வதற்கு லாரிகள்தான் சரியாக வருவது இல்லை. கடந்த 2 தினங்களாக லாரிகள் வராததால், நெல் மூட்டைகள் தேங்கி உள்ளது. இந்த ஆண்டு அதிக விளைச்சல் காரணமாக நெல் வரத்தும் அதிகளவு உள்ளது.

விரைவில் இந்த பிரச்னை சரிசெய்யப்படும்’ என்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திடீர் மழை பெய்து நெல் பாழாகும் முன், அதனை விரைந்து கொள்முதல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: