உடுமலை பேருந்து நிலையத்தில் குவித்து வைத்துள்ள டிவைடர்கள்-பயணிகள் கடும் அவதி

உடுமலை : உடுமலை மத்திய பேருந்து நிலையத்துக்கு தினசரி நூற்றுக்கணக்கான பேருந்துகள் வந்து செல்கின்றன.

மேலும் ஆயிரக்கணக்கான பயணிகள் பேருந்து மூலம் பயணம் செய்கின்றனர். இந்த பேருந்து நிலையத்துக்குள் போக்குவரத்து காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்தநிலையில் இந்த போக்குவரத்து காவல் நிலையம் முன்பாக குவித்து வைக்கப்பட்டுள்ள டிவைடர்களால் பயணிகள் மட்டுமல்லாமல் பேருந்து ஓட்டுநர்களும் அவதிப்படும் நிலை உள்ளது.

இதுகுறித்து பயணிகள் கூறியதாவது: போக்குவரத்து நெரிசலைத் தீர்ப்பதும் போக்குவரத்துக்கான இடையூறுகளைக் களைவதும் போக்குவரத்து போலீசாரின் முக்கிய பணியாக உள்ளது. ஆனால் உடுமலை பேருந்து நிலையத்துக்குள் போக்குவரத்து போலீசாரே இடையூறுகளை  உருவாக்கியுள்ளது வேதனையளிப்பதாக உள்ளது.பேருந்து நிலையம் அருகில் அடிக்கடி ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் போன்றவற்றுக்கு அனுமதியளிக்கப்படுகிறது. அதுபோன்ற நேரங்களில் போக்குவரத்து மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு இந்த டிவைடர்கள் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் அவற்றை பேருந்து நிலையத்துக்குள் குவித்து வைத்துள்ளதால் இந்த பகுதியில் கரூர், தாராபுரம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளை நிறுத்த முடியாத நிலை உள்ளது.அதுமட்டுமல்லாமல் இந்த பகுதியில் போலீசாரின் வாகனம் உட்பட அதிக அளவில் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் இந்த பகுதிகளில் பயணிகள் நிற்பதற்கு இடையூறாக உள்ளதுடன் அடிக்கடி அவசரத்தில் பேருந்துக்காக செல்லும் பயணிகள் டிவைடர்களில் இடித்து காயமடையும் நிலையும் உள்ளது.

அத்துடன் இரு சக்கர வாகனங்கள் மட்டுமல்லாமல் ஆட்டோ,கார் போன்ற வாகனங்களும் சர்வ சாதாரணமாக பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்வதையும் போலீசார் கண்டு கொள்வதில்லை.எனவே போலீசார் இந்த பகுதியிலுள்ள டிவைடர்களை அப்புறப்படுத்தவும் பேருந்துகள் அல்லாத பிற வாகனங்கள் பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்வதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பயணிகள் கூறினர்.

Related Stories:

>