×

பல்லடம் அருகே தனியார் கல்குவாரி ஆக்கிரமிப்பால் பாதையை காணவில்லை-விவசாயி புகாரால் பரபரப்பு

பொங்கலூர் :  திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியத்திற்குட்பட்ட கோடங்கிபாளையம் ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி(47). விவசாயியான இவருக்கு அப்பகுதியில் சுமார் 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் தக்காளி உள்ளிட்ட பல்வேறு பயிர் சாகுபடி மேற்கொண்டு வருகிறார். ஆடு, மாடு மற்றும் கோழி உள்ளிட்ட கால்நடைகளையும் வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது விவசாய நிலம் அருகே காங்கேயம் பாளையத்தை சேர்ந்த ஒருவர்  சிலரது நிலங்களை விலைக்கு வாங்கி அதில் கல்குவாரி நடத்தி வருகிறார். இந்த கல்குவாரியில் எடுக்கப்படும் பாறை துகள் விவசாயி பழனிச்சாமிக்கு சொந்தமான நிலத்தில் மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இப்பகுதியில் உள்ள 6 விவசாய குடும்பங்கள் அவர்களது நிலப் பத்திரம் ஆவணங்களின் உள்ளபடி 16 அடி அகலம் கொண்ட மண் சாலையை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் இந்த கல் குவாரி நிர்வாகம் தனது தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யும் பணியின் போது அந்த பாதையை சேதப்படுத்தி மறைத்து விட்டனர்.

இதனால் அங்குள்ள விவசாய குடும்பத்தினரும் கல்குவாரி நிறுவனத்திற்கு சொந்தமான 40 அடி அகலமுள்ள பாதையில் சென்று வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்டுள்ள விவசாய குடும்பத்தினர் கல்குவாரி நிறுவனத்திடம் பலமுறை முறையிட்டும் அப்படி ஒரு பாதையே இல்லை என கூறி வருவதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து விவசாயி பழனிச்சாமி கூறியதாவது: இப்பகுதியில் நாங்கள் பயன்படுத்தி வந்த பாதை குறித்து எங்களிடமுள்ள ஆவணங்களுடன் கலெக்டர், வருவாய் துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் மனு அளித்தோம். ஆனால் பல மாதமாகியும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் புகாரை கிடப்பில் போட்டு விட்டனர்.  இதனிடையே அந்த கல் குவாரி வளாகத்திலுள்ள கல்லுடைக்கும் இயந்திரத்திலிருந்து வெளியேறும் பாறைத் துகள்கள் விவசாய நிலங்கள் மீது படிவதால் எவ்வித பயிர் சாகுபடியும் செய்ய முடியவில்லை.

தண்ணீரில் பாறை துகள்கள் படிவதால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கால்நடைகள் வளர்க்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு வருவாய் ஈட்ட வழி இன்றி தவிக்கிறேன். எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் அப்பகுதியில் ஆய்வு செய்து காணாமல் போன பாதையை கண்டுபிடித்து கொடுத்து ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து எங்களுக்கு நியாயம் வழங்க வேண்டும். இவ்வாறு விவசாயி பழனிசாமி கூறினார்.

Tags : Calguari , Bangalore: Palanichamy (47) hails from Kodangipalayam panchayat under Palladam union in Tirupur district.
× RELATED கல்குவாரியில் வெடி வைக்க பள்ளம் தோண்டியபோது மண்சரிந்து 2 பேர் பலி..!!