×

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை.. சாதாரண பெண்களுக்கான பாதுகாப்பை எப்படி முதல்வர் உறுதி செய்வார்? : திமுக எம்.பி.க்கள் காட்டம்

சென்னை :திருச்சி புதுக்கோட்டையில் முதல்வர் பழனிசாமி பாதுகாப்பு பணியில் இருந்து திரும்பும் வழியில் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு காவல் உயர் அதிகாரி பாலியல் தொல்லை கொடுத்ததாக தமிழக டிஜிபி மற்றும் உள்துறை செயலரிடம் பெண் எஸ்.பி புகார் மனு அளித்துள்ளார். அதில் முக்கிய பிரச்சனை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று கூறி தன்னை காரில் ஏறச் சொன்னதாகவும் காரில் தம்மிடம் அத்துமீறி நடக்க முயன்றதாகவும் மனுவில் அந்த பெண் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து சீண்டலில் ஈடுபட்ட அதிகாரியை எச்சரித்துவிட்டு காரை விட்டு இறங்கியதாகவும் அந்த பெண் கூறியுள்ளார். இந்த நிலையில் காவல் உயர் அதிகாரி மீதான பாலியல் புகாரை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக எம்பிக்கள் கனிமொழி மற்றும் தமிழச்சி தங்கப்பாண்டியன் வலியுறுத்தி உள்ளனர்.
 
இது தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், திமுக ஆட்சியில் பாதுகாப்பு தரும் போலீசாருக்கே பாதுகாப்பு தேவைப்படுகிறது. ஒரு பெண் IPS அதிகாரி தனது உயர் அதிகாரியால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதை கண்டுகொள்ளாத முதலமைச்சர் சாதாரண பெண்களுக்கான பாதுகாப்பை எப்படி உறுதி செய்வார்?, என காட்டமாக தெரிவித்துள்ளார்.

அதே போல திமுக எம், பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,அதிமுக ஆட்சியில், காவல்துறையின் உயர் பதவியில் உள்ள பெண் அதிகாரிக்கே பாதுகாப்பில்லை என்ற நிலையில், சாமானிய பெண்களின் பாதுகாப்பை இந்த அரசு எவ்வாறு உறுதிபடுத்தும்?. தமிழக முதல்வர் @CMOTamilNadu, உரிய விசாரணை நடத்தி, குற்றம் சாட்டப்பட்டவர் மீது நடவடிக்கை எடுத்து, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், என்று கூறியுள்ளார்.


Tags : Thimyam ,M. , எம்.பி.க்கள்
× RELATED பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய மஜத...