கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் காணொலியில் ஆலோசனை..!!

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது மற்றும் பருவநிலை மாற்றத்தை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆலோசனை நடத்தினார். கொரோனா அச்சம் காரணமாக காணொலி மூலம் இந்த ஆலோசனை நடைபெற்றது. வெள்ளை மாளிகையில் இருந்து பைடனும், கனடா பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோவும் கலந்துரையாடலில் பங்கேற்றனர். அப்போது பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த கனடாவுடன் இணைந்து செயல்படுவோம் என்று ஜோ பைடன் கூறினார்.

2050க்குள் சுற்றுச்சூழல் மாசை பூஜ்யம் அளவிற்கு கொண்டு வரவும் அவர் உறுதிகூறினார். இதுகுறித்து காணொலியில் பைடன் பேசியதாவது, அமெரிக்கா தற்போது பாரிஸ் ஒப்பந்தத்தில் மீண்டும் இணைந்துள்ளது. மற்ற நாடுகள் இலக்கை அடைய நாங்கள் ஒரு தூண்டுகோலாக இருப்போம். உள்நாட்டிலும், மற்ற நாடுகளும் எங்களது உழைப்பை புரிந்துகொள்ளும் அளவில் எங்கள் செயல்பாடுகள் இருக்கும். 2050க்குள் சுற்றுச்சூழல் மாசை பூஜ்ஜியமாக குறைப்பதற்கு கொள்கைகளை வகுப்பதே எங்களின் முக்கிய குறிக்கோள் என குறிப்பிட்டார். கொரோனா பரவல், வகுப்பு வாதத்தை கட்டுப்படுத்துவது, இருதரப்பில் நல்லுறவை மேம்படுத்துவது குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேசினார்.

இருதரப்பு நல்லுறவு மற்றும் வரும் காலங்களில் எதிர்கொள்ளவிருக்கும் முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதித்தோம். கொரோனா பரவல், சுற்றுச்சூழல் மாசு, வகுப்புவாதம் ஆகியவற்றை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசினோம். பெருந்தொற்று முடியும் வரை மக்களை பாதுகாப்பாக வைத்திருப்பதே எங்களது முதல் பணியாகும் என குறிப்பிட்டார். இந்த கலந்துரையாடலின் போது ஜோ பைடனின் நிர்வாகத்திற்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வரவேற்பு தெரிவித்தார். அதிபராக பதவியேற்ற ஜோ பைடன் காணொலி மூலம் வெளிநாட்டு தலைவருடன் நடத்திய முதல் ஆலோசனை இதுவாகும்.

Related Stories:

>