5 ஆண்டுக்கு மேலாகியும் ஆமை வேகத்தில் பணிகள் கோயம்பேடு மேம்பாலம் திறப்பு குறித்த முதல்வரின் அறிவிப்பு என்ன ஆயிற்று? வாகன ஓட்டிகள் சரமாரி கேள்வி

அண்ணாநகர்: சென்னையின் முக்கிய போக்குவரத்து தடமாக கோயம்பேடு 100 அடி சாலை அமைந்துள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட மாநகர பஸ்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றன. அதுமட்டுமின்றி கன்டெய்னர், சரக்கு லாரிகள், கார், ஆட்டோ, பைக் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் இந்த சாலை வழியாக தினசரி சென்று வருகின்றன. இதேபோல், பல்வேறு பகுதிகளில் இருந்து கோயம்பேடு மார்க்கெட் வந்து செல்லும் வாகனங்களும் இந்த சாலையையே பயன்படுத்துவதால் எப்போதும் நெரிசல் மிகுந்து காணப்படும். குறிப்பாக காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுவதால், அலுவலகம் செல்வோர், மாணவ மாணவியர் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.

எனவே, கோயம்பேடு 100 அடி சாலையில் மேம்பாலம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக, ரூ.93.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய மேம்பாலம் கட்டும் பணி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. ஆனால், இதுவரை பணி முடியாமல் மந்தகதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோயம்பேடு மேம்பால பணி 90 சதவீதம் நிறைவடைந்து விட்டது. 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும், என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார். ஆனால், 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆகியும் இதுவரை பணிகள் முடியாமல் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. மேம்பால பணிக்காக 100 அடி சாலை குறுகியுள்ளதால் மேலும் நெரிசல் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘‘5 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த மேம்பால பணிகள், இதுவரை முடியாமல் மந்தகதியில் நடைபெற்று வருகிறது. இதனால், காலை, மாலை நேரங்களில் நெரிசலில் சிக்கி பள்ளி, கல்லூரி, அலுவலக வேலைகளுக்கு செல்வோர் அவதிப்படுகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே பணிகள் முடிந்து, மேம்பாலம் திறக்கப்படும் என முதல்வர் அறிவித்தார். ஆனால், 2 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை பணி முடியவில்லை. அவரது அறிவிப்பு என்ன ஆனது. மேம்பால பணிகள் எப்போது நிறைவு பெறும் என்றே தெரியவில்லை. எனவே, மேம்பால பணிகளை விரைந்து முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories:

>