×

நிர்வாகத்தின் தவறான நடவடிக்கையால் மின்வாரியத்தில் வட்டி கட்ட கடன் வாங்கும் அவலம்: தமிழ்நாடு மின்சாரவாரிய ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் ஐக்கிய சங்க பொதுச்செயலாளர் சுப்ரமணியன்

மக்களுக்கு மின்சார சேவையை வழங்கும் பொருட்டு மின்வாரியம் உருவாக்கப்பட்டன. ஆனால், தற்போது இந்த வாரியம் சேவை என்கிற தனது பாதையில் இருந்து விலகி நிற்கிறது. மின்வாரியத்தில் ஆட்களுக்கு சம்பளம் எதுவும் தராமல் செலவே இல்லாமல் பணியை செய்ய வேண்டும் என்று நினைக்கின்றனர். மின்வாரியத்தில் வயர்மேன், ஹெல்பர் என 32 ஆயிரம் பணியிடங்கள் காலியாக வைத்து சர்வீஸ் பண்ண வேண்டும் என்கின்றனர். இப்படி சர்வீஸ் செய்யும் போது, ஆட்கள் இல்லை. இது குறித்து மேலதிகாரிகளிடம் கேட்டால், ஆட்கள் இல்லை என்று வரும்போது, யாரையாவது வைத்து வேலையை செய்து முடியுங்கள் என்று கூறுகின்றனர். இவர்கள், பர்சனலாக ஆட்களை நியமித்து வேலை செய்ய வேண்டிய நிலை வருகிறது. அந்த சமயத்தில் வேலை செய்கிறவர்களுக்கு சம்பளம் தர வேண்டியுள்ளது. இதனால், அவர்கள் சேவை செய்ய மக்களிடம் பணம் வாங்கி அதை அந்த ஊழியர்களுக்கு ஊதியமாக தருகின்றனர்.

மின்வாரியத்தை பொறுத்தவரையும் மனித உழைப்பு இருக்க வேண்டும். அதே மாதிரி மெட்டீரியல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் ஊழலை ஒழிக்க முடியும். ஆனால், இப்போது இருக்கிற மின்வாரியத்தில் ஊழலை ஒழிக்க முடியாது. மக்களிடம் பணம் வாங்காமல் ஊழியர்களால் மக்களுக்கு சர்வீஸ் செய்ய முடியாத நிலை வந்து விட்டது. இதற்கு அடிப்படை காரணம், காலியிடங்களை நிரப்பாதது ஒன்று. எங்களிடம் ஆட்கள் இருந்தால் அவர்கள் ஆன்லைனில் பதிவு செய்தாலேயே போதும். நாங்கள் போய் அவர்களுக்கு சப்ளை கொடுத்து விட்டு வந்து விடுவோம். ஆனால், அப்படி இல்லை. நிர்வாக கட்டமைப்பில் உள்ள குளறுபடி தான் ஊழலுக்கு காரணம். 20 வருடமாக பவர் பிளாண்ட் போட்டு உற்பத்தியை ஸ்டார்ட் செய்வதற்கான நிலைமை இல்லை. 2013ல் போட்டு 2014ல் வரக்கூடிய பிளாண்ட் இன்றுவரை மின் உற்பத்தியை தொடங்கவில்லை. நிறைய பிரச்னைகள் அதில் இருக்கிறது. ஏற்கனவே ஒருவர் டெண்டர் எடுக்கிறார்.

பின்னர் வேறொருவருக்கு டெண்டர் கொடுத்தனர். அவர்களும் பணியை செய்து முடித்து ஒப்படைக்கவில்லை. இப்படி பெரும்பாலான பணிகளை முடிப்பதில் தாமதம் காரணமாக, மின்வாரியம் வெளியில் இருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அரசாங்கம் ஒரு திட்டத்தை  4 வருடத்துக்குள் முடிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கிறது. ஒரு ஆண்டு கூடுதலாக சென்றால் பரவாயில்லை. ஆனால், 4 ஆண்டுகளில் முடிய வேண்டியவை, 10 வருடமாக ஒரு திட்டம் முடியவில்லை என்றால் இதன் திட்டமதிப்பு ரூ.5 ஆயிரம் கோடி என்றால் ரூ.10 ஆயிரம் கோடியாக மாறுகிறது. இதற்கு தேவையில்லாமல் வட்டி கட்ட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இன்னொன்று, அதில் இருந்து மின்சார உற்பத்தி செய்வதாக இருந்தால் நியாயமான விலையில் மக்களுக்கு விநியோகம் செய்து இருப்போம். ஆனால், வெளியில் இருந்து அதை காசு கொடுத்து வாங்குகிறது. சில நேரங்களில் வேண்டுமென்றே மின்சாரத்தை கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்கின்றனர். குறிப்பாக, அதானி நிறுவனத்திடம் ஒரு யூனிட் ரூ.7.01 பைசா என்று சோலார் பிளாண்ட் மூலம் மின் கொள்முதலுக்கு 25 வருடத்துக்கு ஒப்பந்தம் போட்டுள்ளோம்.

ஆனால், அகில இந்திய அளவில் சோலார் பிளாண்ட்டில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்ய கமிட்டி உள்ளது. அந்த கமிட்டி சோலார் பிளாண்ட் மூலம் அதிகளவில் மின்சாரத்தை கொள்முதல் செய்யும்போது, ஒரு யூனிட் 1.80 பைசாவில் 10 வருடத்தில் கிடைக்க ஆரம்பித்து விடும் என்று கூறுகின்றனர். ஆனால், ஒரு யூனிட் ரூ.7.80க்கு வாங்க போவதாக ஒப்பந்தம் போட்டுள்ளனர். இன்றைக்கே ரூ.3.80 முதல் ரூ.4 வரை ஒரு யூனிட் கிடைக்கிறது. ரூ.2.80க்கு போட தயாராக உள்ளனர். ஆனால், நாம் ஒப்பந்தம் போட்டு பெரிய அளவிலான கார்ப்பரேட் நிறுவனத்திடம் கட்டாயமாக மின்சாரம் கொள்முதல் செய்வதால், மின்வாரியத்துக்கு வரக்கூடிய வருவாய் அவர்களுக்கு தான் செல்கிறது. அதாவது கிட்டத்தட்ட வருவாயில் 62 சதவீதம் அவர்களுக்கு செல்கிறது. மின்வாரிய கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சோலார் பிளாண்ட் என்பதை நாமே அமைக்க முடியும். ஒரு முறை முதலீடு தான். நாம் கடன் வாங்கி அந்த பிளாண்ட்டை அமைக்கலாம். நமக்கு நீண்டகால திட்டமாகவும், லாபகரமானதாகவும் இருக்கும். இந்த மாதிரி தவறான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

புதிய சேர்மன் வந்த பிறகு எல்லா பிரிவுகளில் நிறைய கால பணியிடங்கள் உள்ளது. இதனால், கால நேரம் பார்க்காமல் மின்வாரிய ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். அந்த ஊழியர்கள் பதவி உயர்வு கொடுத்தால் கூட கீழ் நிலை பணிகளையும் செய்கின்றனர். கடுமையாக உழைக்கும் மின்வாரிய ஊழியர்களுக்காக சில இடங்களில் புதிய பணியிடங்கள் உருவாக்கி பதவி உயர்வு அளித்தது. ஆனால், இப்போது இருக்க கூடிய நிர்வாகம், புதிய பணியிடங்கள் தேவையில்லை எனக்கூறி எல்லா பணியிடங்களையும் நீக்கி விட்டனர். ஒவ்வொரு சப் டிவிஷனிலும் வொர்க் கான்ட்ராக்ட் மூலம் ஆட்களை எடுக்க வேண்டும் என்று அரசாணை பிறப்பித்துள்ளனர். அதை எதிர்த்து நாங்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினோம். உடனே அந்த அரசாணையை ரத்து செய்து விட்டனர். ஆனால், மின்வாரியம் சார்பில், மீண்டும் எஸ்இ, இஇக்கு அதிகாரம் தருகிறேன். அந்த அதிகாரத்தை பயன்படுத்தி ஒவ்வொரு ஏரியாவிலும் பாரமரிப்பு பணியை செய்யலாம் என்று உத்தரவு போட்டுள்ளது. இது, ஊழியர்கள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பான சூழ்நிலை உள்ளது. மின்வாரியத்தில் நிரந்தரமாக ஆட்களை வைத்து கொள்ள வேண்டும் என்ற சூழல் இல்லை. நாங்கள் சேர்மன், அமைச்சரிடம் பேசியுள்ளோம். ஆனால், 32 ஆயிரம் காலி பணியிடத்துக்கு, 2900 பேரை தான் எடுக்கின்றனர். அப்படி என்றால் நாங்கள் எப்படி சர்வீஸ் செய்ய முடியும்.

மின்வாரிய தலைவராக சாய்குமார் இருக்கும் போது, மின்வாரியம் ஆண்டுக்கு ரூ.8 ஆயிரம் கோடி வட்டி கட்ட கூடிய கடன் இருந்தது என்றால், அதில் ரூ.4 ஆயிரம் கோடி வருவாயில் இருந்து கட்டப்பட்டது. ஒவ்வொரு வருடத்தின் நஷ்டத்தை குறைத்து அவர்கள் நிர்வாகத்தை சிறப்பாக நடத்தினார். ஆனால், விக்ரம்கபூர் தலைவராக வந்த பிறகு மின்வாரியத்தின் கடன் 2 ஆண்டுகளில் 1.50 லட்சம் கோடியாக கடன் ஆகி விட்டது. இப்படி கடன் அதிகரித்ததற்கு என்ன காரணம் என்பது எங்களுக்கு புரியாத புதிராக உள்ளது. மின்வாரியம் வெள்ளை அறிக்கை கொடு த்தால் தான் எங்களால் புரிந்து கொள்ள முடியும். மத்திய அரசு நிர்பந்தத்தால் அவர்கள் சொல்வதை செய்ய வேண்டும் என்று நிர்வாகம் அபத்தமான வேலையை செய்தது. டிரான்ஸ்பார்மர் தயாரிக்க கம்பெனி ஒரு சிண்டிகேட்போட்டு 10 ஆயிரம் டிரான்ஸ்பர் சப்ளை செய்வது போன்று ஒரு புரொஜக்ட் போடுங்கள் என்று மத்திய அரசிடம் கூறுகின்றனர். உடனே மத்திய அரசு ஒரு திட்டம் அறிமுகப்படுத்துகிறோம். தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் ரூ.4 ஆயிரம் கோடி கடன் தருகிறேன். நீ 10 ஆயிரம் டிரான்ஸ்பார்மர் வாங்கி கொள் என்று கூறுகின்றனர்.

உடனே தமிழக அரசும் கடனை வாங்கி அந்த டிரான்ஸ்பார்மரை வாங்கி கொள்கிறது. ஆனால், மின்வாரியத்துக்கு இந்த டிரான்ஸ்பார்மர் தேவையா என்றால் நிச்சயம் இல்லை. மின்வாரியத்தில் லோடு அதிகம் தேவை என்றால் டிரான்ஸ்பார்மர் வாங்கலாம். ஆனால், இன்றைய நிர்வாகம் தேவையில்லாத நிலையில் டிரான்ஸ்பார்மர் வாங்குகின்றனர். அவர்கள் வளர்ச்சி அடிப்படையில் மேம்பாடு என்று இல்லாமல் மேம்பாடு மட்டுமே டார்க்கெட்டாக நிர்ணயிக்கின்றனர். ஒரு வருடத்திற்கு இத்தனை டிரான்ஸ்பர் போடுங்கள், இத்தனை லைன் போட வேண்டும். இத்தனை மீட்டர் மாற்றி ஆக வேண்டும் என்று நிர்ணயிக்கின்றனர். இப்போது மீட்டர் தயாரிக்கும் நிறுவனங்கள் மீட்டர் விற்றே ஆக வேண்டும் என்று மத்திய அரசிடம் சொன்னால் அவர்கள் தமிழகத்தில் மீட்டர் வாங்குங்கள் என்று கூறி கடனும் தருகின்றனர். உடனே அவர்களும் 10 லட்சம், 20 லட்சம் மீட்டர் வாங்குகின்றனர். மத்திய அரசின் உதயம் திட்டத்தில் சேர்ந்த பிறகு,  அவர்கள் போடும் திட்டத்தில் தமிழக மின்வாரியத்தில் என்ன பொருட்கள் எல்லாம் வாங்க வேண்டும் என்று கூறி அதையெல்லாம் அனுப்பி வைத்து விட்டனர். நம்மிடம் இப்போது டிரான்ஸ்பார்மர், மீட்டர் லட்சக்கணக்கில் உள்ளது. சப் ஸ்டேஷன் தேவையில்ாமல் அமைக்கப்பட்டுள்ளது. கடன் கொடுக்கிறார்கள் என்பதற்காக எல்லாவற்றையும் வாங்குகின்றனர்.

இந்த மாதிரியான நிலை கடந்த 5 ஆண்டுகளாக உள்ளதால், மின்வாரியத்தில் வட்டி கட்ட கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதில் இருந்து மீண்டு வருவதற்கு எந்த ஒரு வழிமுறையும் தெரியவில்லை. மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்குவதை  முதலில் நிறுத்த வேண்டும். மின்வாரியம் சார்பில் மினசாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தை மேற்கொள்ள வேண்டும். தேவையில்லாமல் பொருட்களை வாங்க முதலீடு செய்யக்கூடாது. 1 வருடம் நிலக்கரி கொள்முதல் செய்ய ரூ.1330 கோடியில் டெண்டர் விட்டுள்ளனர். அப்படி ஒரு ஆண்டுக்கு நிலக்கரி வாங்க இப்போது நேரம் இல்லை. அந்த நிலக்கரி தரமானதா என்று பரிசோதிக்கவில்லை. இங்கு வந்து தான் அந்த நிலக்கரி தரமானதா என்று பார்க்கின்றனர். இதனால், போக்குவரத்து செலவை காரணம் காட்டி தரமானதாக இல்லை என்றாலும் நிலக்கரி வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது போன்று அல்லாமல் நிலக்கரி ஏற்றுமதி செய்யும் இடத்தில் சோதனை செய்து, தரமானதாக இருக்கிறதா என்று கண்டறிய வேண்டும். தரமான நிலக்கரி மூலம் அனல் மின் உற்பத்தி நிலையம் பயன்படுத்துவதன் மூலம் பல ஆயிரம் கோடி நமக்கு வருவாய் கிடைக்கும்.



Tags : Subramanian ,Secretary General ,United Association of Electricians and Engineers ,Tamil Nadu , Tamil Nadu Electricity Board Employees and Engineers Union General Secretary Subramanian
× RELATED நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...