×

தமிழக நிதி மேலாண்மை வரலாற்றில் அழிக்க முடியாத கரும்புள்ளிகளை ஏற்படுத்திய ஓ.பி.எஸ், இபிஎஸ்: பேரவை வளாகத்தில் துரைமுருகன் பரபரப்பு பேட்டி

சென்னை: ‘‘தமிழக நிதி மேலாண்மை வரலாற்றில் பன்னீர் செல்வமும், பழனிசாமியும், அதிமுக  ஆட்சியில் அழிக்க முடியாத கரும்புள்ளிகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள்’’ என்று துரைமுருகன் கூறியுள்ளார். சட்டமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் அளித்த பேட்டி: இடைக்கால நிதி நிலை அறிக்கை கூட்டத் தொடரை திமுக புறக்கணிக்கிறது. இதற்கு என்ன காரணம் என்பதை சபையில் படித்து விட்டு வெளிநடப்பு செய்து இருக்கிறோம். கலைஞர் ஆட்சியில் இருந்து இறங்குகிறபோது, தமிழகத்துக்கு 1 லட்சம் கோடி கடன் தான் இருந்தது. இன்றைக்கு எடுத்த எடுப்பிலேயே நிதி அமைச்சர் எங்கள் ஆட்சியில் 5.7 லட்சம் கோடி கடன் என்று சொல்கிறார். இதை விட இந்த ஆட்சியை, ஆட்சி செய்ய அறுகதை அற்ற ஆட்சி என்று சொல்வதை விட வேறு சான்று கிடையாது. தமிழக நிர்வாகத்தையும், நிதி நிர்வாகத்தையும், நிர்மூலம் ஆக்கிய ஆட்சி தான் இந்த அதிமுக.

கடன் வாங்கி, தமிழகத்தின் கடன் தொகை 5.7 லட்சம் கோடியாக ஆக்கிய கடனாளி அரசு தான் இந்த பழனிசாமி அரசு. கடன் வாங்கி மக்களுக்கு நன்மை செய்யவில்லை. டெண்டர்களை விட்டு பினாமிகளுக்கு பங்கீட்டு கொடுத்து இருக்கிறார். இதுதான் பழனிசாமிக்கு தெரிந்த நிதி நிர்வாகம்.  கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து வாடி மக்களுக்கு நேரடியாக பண உதவி செய்யாமல், தேர்தல் நேரத்தில் சுயநலத்திற்காக பணம் கொடுக்கிறது இந்த அரசு. விளம்பர மோகத்தால் கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்து கொண்டிருக்கிறார் பழனிசாமி. தேர்தலுக்கு முன்பு பணிகளை முடிக்க முடியாது என்று தெரிந்தும், கடந்த 3 மாதங்களில் மட்டும் ₹40 ஆயிரம் கோடிக்கு மேற்பட்ட மதிப்புள்ள டெண்டர்களை விட்டு அரசு கஜானாவை காலி செய்து இருக்கிறார். தமிழகத்தின் வளர்ச்சியை 50 ஆண்டுகள் பின்நோக்கி கொண்டு சென்று விட்டார்கள். தமிழக நிதி மேலாண்மை வரலாற்றில் பன்னீர் செல்வமும், பழனிசாமியும், அதிமுக ஆட்சியில் அழிக்க முடியாத கரும்புள்ளிகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அனைத்து துறைகளிலும் படுதோல்வி அடைந்த ஒரு அவல ஆட்சியை கொடுத்து விட்டு செல்வோரின் கடைசி நிதிநிலை அறிக்கை தான் இந்த நிதி நிலை அறிக்கை.

தமிழக மக்களின் பேராதரவுடன் திமுக ஆட்சி பொறுப்பேற்கும். பொறுப்பேற்றதும் நிதி மேலாண்மையில் ஏற்பட்டுள்ள அனைத்து முறைகேடுகளையும் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தின் நிதி நிலைமை, தமிழக மக்களுக்கு உறுதிப்படுத்தும் வகையில்  சீர்படுத்தப்படும். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தில் 152 தொகுதி மக்கள், தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து இருக்கிறார். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி என்ற ஒன்றே இல்லை என்பதற்கு உதாரணம் தான் தலைவரிடம் அளிக்கப்பட்ட மனுக்கள். 110 விதியின் அறிவிப்பு மிகவும் மோசமானது. ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட 5 ஆண்டு காலமாக செயல்படாத எண் தான் 110. இது ஊழல் அரசு,  இது உதவாக்கரை அரசு. இந்த அரசின் நிதிநிலை அறிக்கையில் திமுக கலந்து கொள்ளாது என்று வெளிநடப்பு செய்துள்ளோம். மீண்டும் பொதுத்தேர்தல் நடக்கும். அந்த தேர்தலில் திமுக வெற்றி பெறும். வெற்றி பெற்ற பிறகு மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பு ஏற்று வருகிற போது, மீண்டும் நாங்கள் சபைக்கு திரும்புவோம். இது எங்களுடைய திடமான முடிவு. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : TN Financial Management ,EPS ,Duryumurugan Broadcasting , OBS, EPS, which have left indelible black marks in the history of Tamil Nadu financial management: Thuraimurugan's sensational interview at the Assembly premises
× RELATED தமிழ்நாட்டில் 5 சுங்கச்சாவடிகளின்...