×

டூல்கிட் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பெங்களூரு மாணவி திஷா ரவிக்கு ஜாமீன்: டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: டூல்கிட்’ விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட திஷா ரவிக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, சுவிட்சர்லாந்தை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பர்க் கருத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த   சுற்றுச்சூழல் ஆர்வலரான திஷா ரவியை டெல்லி போலீசார் பெங்களூரில் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி பாட்டியாலா நீதிமன்றத்தில் திஷா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கூடுதல் செசன்ஸ் நீதிபதி தர்மேந்தர் ராணா ஜாமீன் மீதான தீர்ப்பை 23ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இந்நிலையில், தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. அப்போது, நீதிபதி ராணா ``சாட்சியங்கள் போதாது, புனையப்பட்டு இருக்கின்றன.  இளம்பெண் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் எதுவும் முழுமையாக இல்லை. இதனால், ஜாமீன் வழங்கக் கூடாது என்பதற்கு தெளிவான காரணம் எதுவுமில்லை.

அதனால், அவருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது,’ என உத்தரவிட்டார். மேலும் நீதிபதி தனது உத்தரவில் கூறியிருப்பதாவது; காலிஸ்தான் ஆதரவு அமைப்பான பொயட்டிக் ஜஸ்டிஸ் பவுண்டேசன் என்ற அமைப்பிற்கும், திஷாரவிக்கும் உள்ள தொடர்பு பற்றி எந்தவித ஆதாரமும் காணப்படவில்லை. மேலும் ஜனவரி 26ம் தேதி வன்முறை நடந்ததற்கு திஷா ரவியோ அல்லது காலிஸ்தான் ஆதரவு அமைப்புகள் தூண்டிவிட்டதாகவோ ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை. வாட்ஸ்அப் குழுவை உருவாக்குவது அல்லது டூல்கிட்டை எடிட் செய்வது குற்றம் ஆகாது.  அரசுடன் உடன்படாவிட்டால், அதற்காக அவர்களை சிறையில் அடைக்க முடியாது.  

நமது அரசியல் அமைப்பின் 19வது பிரிவில் மாறுபட்ட கருத்து தெரிவிக்க வழிவகை உள்ளது. என்னைப்பொறுத்தவரையில் பேச்சுசுதந்திரம் மற்றும் ஒரு பிரச்னையில் உலக அளவில் ஆதரவு திரட்டுவது ஆகியவை இதில் அடங்கும். தகவல் தொடர்புக்கு எந்தவித தடையும் இல்லை. ஒரு குடிமகன் சட்டத்தில் உள்ள 4 முனைகளிலும் தகவல் தொடர்பை பெறுவதற்கும், வெளிநாட்டில் இருந்து ஆதரவு பெறுவதற்கும் அடிப்படை உரிமைகள் உள்ளன. அதன்அடிப்படையில் திஷாரவிக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிறையில் இருந்து வெளியே வந்தார்
டூல்கேட் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட திஷா ரவிக்கு நேற்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் உடனடியாக திகார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

Tags : Disha Ravi ,Bangalore ,Tolkien ,Delhi , In Tolkien case, arrest, Disha Ravi, bail, Delhi court
× RELATED பெங்களூரு வணிக வளாகத்தில் தீ விபத்து:...