×

நான் முதல்வர் ஆனாலும் உங்களில் ஒருவன் தான்: கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: நான் முதல்வர் ஆனாலும் உங்களில் ஒருவன்தான் என்று கொளத்தூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். திமுக தலைவரும் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான மு.க.ஸ்டாலின் நேற்று மாலை கொளத்தூர் தொகுதிக்கு வந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முதற்கட்டமாக, கொளத்தூர் 69வது வார்டுக்குட்பட்ட திக்காகுளம் பகுதியில் சலவை கூடத்தில் புதிதாக தண்ணீர்தொட்டியுடன் கூடிய சலவை மேடை மற்றும் சலவைத் தொழிலாளர்கள் ஓய்வெடுக்கும் அறை மற்றும் அதிநவீன செலவைக்கூடத்தை திறந்துவைத்தார். செம்பியம் லூர்து பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேம்படுத்தப்பட்ட விளையாட்டு திடல் மற்றும் கூடைப்பந்தாட்ட திடலை திறந்துவைத்தார்.

64வது வார்டு அரிதாஸ் சாலையில் தாமரைக் குளம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வண்ண விளக்குகள் மற்றும் குளத்தை ஒட்டி நடைபாதை அமைக்கும் பணியை துவக்கி வைத்தார். தொடர்ந்து, 65வது வார்டுக்கு உட்பட்ட ஜம்புலிங்கம் சாலையில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் தையல் பயிற்சி முடித்த 199 மகளிர்களுக்கு தையல் இயந்திரம் மற்றும் பரிசுப்பொருள் வழங்கினார். இதையடுத்து, 66வது வார்டு ஜவஹர் நகர் முதல் வட்ட சாலையில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் உயர் ரக சறுக்கு விளையாட்டு திடல் மற்றும் விளையாட்டு மைதானம் உள்ளிட்டவற்றை திறந்து வைத்தார்.

ஜெயின் பள்ளியில் நடந்த அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயிற்சி முடித்த 87 மாணவிகளுக்கு மடிக்கணினி மற்றும் சான்றிதழ் வழங்கினார். இதேபோன்று, 78 மாணவர்களுக்கு மடிக்கணினி மற்றும் சான்றிதழ் வழங்கினார். தொடர்ந்து, அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயிற்சி முடித்த மாணவ, மாணவியர் 733 பேருக்கு பரிசு பொருட்களை வழங்கினார். மேலும், 67வது வார்டில் ஜெகநாதன் சாலையில் அமைந்துள்ள உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,‘‘என்னை பல பேர் இங்கு வருங்கால முதல்வர் என அழைத்தார்கள்.

நான் முதல்வராக ஆனாலும் என்றும் உங்களில் ஒருவன்தான், நான். சென்னை மேயராக பணியாற்றியபோது ஜி.கே.மூப்பனார் என்னை பாராட்டி பேசினார். நான் மேயராக இருந்தபோது குறிப்பு ஒன்றை எழுதி கலைஞரிடம் கொடுத்தேன்.
அதை கலைஞர் படித்துவிட்டு, மேயர் பதவி என்பதை, மேயர் பொறுப்பு என திருத்தி கொடுத்தார். எப்போதும் பதவியை பொறுப்பாக நினைத்து பணியாற்ற வேண்டும். கொளத்தூரில் உள்ள அனிதா அச்சீவர்ஸ் அகாடமி, திமுக ஆட்சி அமைந்ததும் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தொடங்கப்படும். தற்பொழுது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன்.

நான் எப்போது சென்னை வருவேன் என சேகர்பாபு காத்துக் கொண்டிருப்பார். அவ்வாறு வந்தவுடன் உடனடியாக கொளத்தூர் பகுதிக்கு அழைத்து வந்துவிடுவார். சோர்வாக இங்கு வந்தாலும் உங்களை பார்த்தவுடன் துடிப்புடன் நான் உணர்கிறேன்”  என்றார். நிகழ்ச்சியில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்ட மன்ற உறுப்பினர்கள் பி.கே.சேகர்பாபு, ரங்கநாதன், தாயகம் கவி, பகுதி செயலாளர்கள் ஜசிஎப் முரளி, நாகராஜன், சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : Kolatur, BC ,Q. Stalin , I am the Chief Minister but I am one of you: MK Stalin's speech in Kolathur
× RELATED அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள்,...