×

பாஜ சூழ்ச்சியால் புதுச்சேரி கைவிட்டு போன நிலையில் 31 மாநில, யூனியன்களில் 20ல் பாஜக, 5ல் காங். ஆட்சி...5 மாநில தேர்தலுக்கு மத்தியில் அரசியல் களம் சூடுபிடிப்பு

புதுடெல்லி: பாஜகவின் சூழ்ச்சியால் புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்த நிலையில், 5 மாநில தேர்தல்கள் அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது. இன்றைய நிலையில் 31 மாநில, யூனியன் பிரதேசங்களில் பாஜக மற்றும் அதன்  கூட்டணி 20 மாநிலங்களிலும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி 5 மாநிலங்களில் ஆட்சி செய்கின்றன. கடந்த 2019ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவிய நிலையில், அப்போது கட்சியின் தலைவராக இருந்த  ராகுல்காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். சில மாதங்கள் கழித்து அவரது தாயார் சோனியா காந்தி, கட்சியின் இடைக்கால தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

கட்சிக்கு நிரந்த தலைவரை தேர்வு செய்வது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று அறிவித்த நிலையில் அந்த காலகட்டமும் முடிந்தது. அதனால், இரண்டாவது முறையாக சோனியா காந்தியே கட்சியின் இடைக்கால தலைவராக  அறிவிக்கப்பட்டார். இந்த விஷயத்தில் காங்கிரசின் மூத்த தலைவர்கள் கபில்சிபல், குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா உள்ளிட்ட 23 பேர், கட்சிக்கு நிரந்தர தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்றும், கட்சியை பலப்படுத்த தொலைநோக்கு  திட்டங்களை வகுக்க வேண்டும் எனக்கூறி சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர்.

அதன் தொடர்ச்சியாக நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் புதிய தலைவர் தேர்வு செய்தல் குறித்து முறையான தேர்தல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், இதுவரை கட்சிக்கு புதிய தலைவரை காங்கிரஸ் கட்சி தேர்வு செய்து  அறிவிக்கவில்லை. நிலைமை இவ்வாறு இருக்க, தமிழகம், கேரளா, மேற்குவங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கு பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் அட்டவணை வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில்  புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி பாஜகவின் திரைமறைவு சூழ்ச்சியில் நேற்று கவிழ்ந்தது.

தென்மாநிலங்களில் காங்கிரஸ் அரசு அமைந்த ஒரே மாநிலமான புதுச்சேரியும் கைவிட்டு போனது. கேரளாவில் இடதுசாரிகள் ஆட்சி நடைபெற்று வரும்நிலையில், வரும் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க முயற்சித்து வருகிறது.  ராகுல்காந்தி கேரளாவில் முகாமிட்டு பிரசாரம் செய்து வருகிறார். அசாமில் தனித்தும், மேற்குவங்கம், தமிழகத்தில் கூட்டணியுடன் சேர்ந்து தேர்தலை காங்கிரஸ் எதிர்கொள்கிறது. ஏற்கனவே பஞ்சாப் மற்றும் சட்டீஸ்கர் ஆகிய இரு  மாநிலங்களில் தனிப்பெரும் கட்சியாக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி நடத்தி வருகிறது. அதே ராஜஸ்தான் (காங்கிரஸ்), மகாராஷ்டிரா (சிவசேனா), ஜார்க்கண்ட் (ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா) ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி  நடக்கிறது.

நாடு முழுவதும் பார்த்தால் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 5 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளன. மொத்தமுள்ள 31 மாநில, யூனியன் பிரேதேசங்களில் 20 இடங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆட்சியும் நடக்கிறது. இதில் 12  மாநிலங்களில் பாஜக தனித்து ஆட்சி நடத்துகிறது. எட்டு மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. அதன்படி, அருணாச்சல பிரதேசம், அசாம், கோவா, குஜராத், இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம், மணிப்பூர்,  திரிபுரா, உத்தரபிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜகவும், அரியானாவில், ஜனநாயக் ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து பாஜக முதல்வர் ஆட்சி நடத்தி வருகிறார். ஆந்திரா, பீகார், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ஒடிசா,  சிக்கிம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பாஜக கூட்டணியில் பல்வேறு கட்சிகள் ஆட்சி நடத்தி வருகின்றன. 5 மாநில தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் பாஜக - காங்கிரஸ் - இதர கட்சிகளின் வெற்றி எண்ணிக்கை எந்த பக்கம்  அதிகமாகும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.



Tags : Baja ,5th Kong ,Novuchcheri , As Puducherry was abandoned by the BJP maneuver, the BJP won 20 of the 31 states and unions and the Cong won 5 seats. Rule ... Political arena heating up in the middle of 5 state elections
× RELATED உதவியாளர்களிடம் ரூ.4 கோடி பறிமுதல்...