நாகர்கோவில்: பெட்ரோல், டீசல் விலை உயர்வால், குமரி மாவட்டத்தில் ஆட்டோ கட்டணம், காய்கறிகளின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளன. இதனால் பொதுமக்கள் பெரும் பரிதவிப்புக்கு உள்ளாகி உள்ளனர். பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பொது மக்கள் பயன்படுத்த கூடிய அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளன. குறிப்பாக காய்கறிகளின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளது. சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.130, ரூ.140 வரை எட்டி உள்ளது. இன்னும் விலை உயர வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் கூறி உள்ளனர்.
இதே போல் மற்ற காய்கறிகளின் விலைகளும் உயர்ந்துள்ளன. தக்காளி, பீட் ரூட், கேரட், பீன்ஸ் உள்ளிட்ட விலைகளும் கடந்த மாதத்தை விட ரூ.10 வரை அதிகரித்துள்ளன. வடசேரி உழவர் சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை கிலோ ரூ.55 க்கு விற்பனையானது. மற்ற மார்க்கெட்டுகளில் ரூ. 60 ஆக இருந்தது. தக்காளி கிலோ ரூ.30, உருளை ரூ.30, பீட் ரூட் ரூ.40, பீன்ஸ் ரூ.52, கேரட் ரூ.40 ஆக விற்பனை செய்யப்படுகிறது. கத்தரிக்காய் (நாடு) ரூ.50, சாதாரகம் ரூ.40 ஆகவும் உள்ளன. தேங்காய் கிலோ ரூ.38, ரூ.45 என ரகங்களில் உள்ளன. இதே போல் ஆட்டோ கட்டணமும் உயர்ந்துள்ளது. குறைந்த பட்சம் கட்டணம் ரூ.40 என இருந்த நிலை மாறி தற்போது ரூ.50 ஆக அதிகரித்துள்ளனர்.
வடசேரி, அண்ணா பஸ் நிலையம், கோட்டார் ரயில் நிலையத்தில் இருந்து நகரின் பிற பகுதிகளுக்கு செல்வதற்காக ஆட்டோ கட்டணம் உயர்ந்துள்ளது, வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வே இதற்கு காரணம் என ஆட்டோ டிரைவர்கள் கூறி உள்ளனர்.
ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.93.73
நாகர்கோவிலில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.93.42க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று மேலும் உயர்ந்து ரூ.93.73க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை போன்று ஒரு லிட்டர் டீசல் ரூ.86.81க்கு நேற்று விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.87.14க்கு விற்பனை செய்யப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகளை நிர்ணயம் செய்துகொள்ள மத்திய அரசால் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தொடர்ந்து விலையேற்றம் நடைபெற்று வருகிறது. கடந்த 12 நாட்களாக தொடர்ந்து விலை உயர்வு செய்யப்பட்டு வருகின்ற நிலையில் இந்த விலை உயர்வு வாகன ஓட்டிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.