×

கோடையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்: குமரியில் வாட்டி வதைக்கும் வெயில்

நாகர்கோவில்: குமரியில் வாட்டி வதைக்கும் வெயிலால், கோடையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. காலையிலேயே வெயில் சுட்டெரிக்க தொடங்கி விடுகிறது. சாலைகளில் நடக்கும் போது செருப்பையும் மீறி பாதங்களை சுடும் அளவிற்கு வெப்பத்தின் அளவு உயர்ந்துள்ளது. பகல் நேரங்களில் ெவயிலின் தாக்கத்தினால் சாலைகளில் கானல் நீரை காணமுடிகிறது. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் செல்லாமல் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வெயிலை சமாளிக்க இளநீர், நுங்கு, பதநீர், கூழ் விற்கும் ஏராளமான சாலையோர கடைகள் முளைத்துள்ளன. சூட்டை தணிக்கும் தர்பூசணி பழம், கிர்ணி பழம், வெள்ளரி பிஞ்சு போன்றவற்றின் விற்பனையும் அதிகரித்துள்ளது. பழ ஜூஸ்கள், சர்பத், நுங்கு சர்பத், கரும்பு சாறு போன்றவையும் அதிகளவில் விற்பனையாகிறது. இது போன்ற கடைகளில் கூட்டத்தை அதிகளவில் காண முடிகிறது. இதனால் அதன் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது.

உதாரணமாக ரூ.10க்கு விற்கப்பட்ட 1 கிலோ தர்பூசணி ரூ.15க்கும், அதன் ஜூஸ் ஒரு கப் ரூ.15க்கும் விற்கப்படுகிறது. கரும்பு சாறு ரூ.15ல் இருந்து ரூ.20க்கும், நுங்கு சர்பத் ரூ.30ல் இருந்து ரூ.50க்கும் உயர்த்தி விற்பனை செய்யப்படுகிறது. உடலுக்கு அதிக பலன் தரும் என்பதால் இளநீர் வியாபாரம் அதிகரித்துள்ளது. கடைகளில் பழ வகைகளின் ஜூஸ் வாங்கி அருந்தவும் மக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டுகிறார்கள். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் குளிர்பான வியாபாரிகள், பழ வியாபாரிகள் குவிந்துள்ளனர். இவர்களிடம் பொருட்களை வாங்க மக்கள் திரள்வதால், போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுகிறது. மாசி மாதமே வெயில் சுட்டெரிக்க தொடடங்கி இருப்பதால் பங்குனி, சித்திரை மாதங்களில் அதிகளவில் வெயிலின் தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மழை இல்லாததால், அணைகளின் நீர் மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது.பேச்சிப்பாறை நீர் மட்டம் 41.50 அடியாகவும், பெருஞ்சாணி அணை நீர் மட்டம் 61.22 அடியாகவும் உள்ளன. பொய்கை 20.10 அடியாகவும், சிற்றார்1, 8.56, சிற்றார்2, 8.66 அடியாகவும் உள்ளன. முக்கடல் அணை நீர் மட்டம் 14.7 அடியாகி உள்ளது. நீர் மட்டம் குறைந்து வருவதால், நாகர்கோவில் மாநகரில் கோடையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

Tags : Willing ,Kumarai , Summer
× RELATED ‘சமரசம் செய்ய விரும்பு’முத்தரப்பு கருத்தரங்கில் நீதிபதிகள் பங்கேற்பு