×

'தமிழகத்திற்கு மத்திய அரசு போதிய நிதியை ஒதுக்கவில்லை'!: இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த ஓ.பி.எஸ். குற்றச்சாட்டு..!!

சென்னை: தமிழகத்திற்கு மத்திய அரசு போதிய நிதியை ஒதுக்கவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். சட்டப்பேரவையில் 2021 - 22ம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். கடந்த ஆண்டிற்கான நிதிக்குழுவின் இடைக்கால அறிக்கையில் தமிழகம் போன்று சிறப்பாக செயல்படும் மாநிலத்திற்கு உரிய பலன்கள் கிடைக்கவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 15வது நிதிக்குழுவின் அறிக்கை தமிழகத்தின் நியாயமான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாமல் இருப்பதுடன் 14வது நிதிக்குழுவில் இழைக்கப்பட்ட அநீதியை சரிசெய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பெட்ரோல் - டீசல் மீது விதிக்கப்படும் ஆய தீர்வையில் மத்திய அரசு மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணங்களின் பங்கை கணிசமாக உயர்த்தி அடிப்படை தீர்வையில் பங்கை குறைத்ததால் தமிழகத்திற்கு நிதி இழப்பு ஏற்பட்டதாக  ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார். பல்வேறு பொருட்கள் மீதான அடிப்படை சுங்கவரி குறைக்கப்பட்டு அதற்கு மாற்றாக வேளாண்மை உட்கட்டமைப்பு மேம்பாட்டில் மேல்வரி விதிக்கப்பட்டுள்ளதால் மாநிலங்களுடன் பகிர்ந்துகொள்ளக்கூடிய மத்திய வரி வருவாய் மேலும் குறைந்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.

மேலும், தமிழ்நாட்டின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மொத்த மானிய தொகை 15வது நிதிக்குழுவின் பரிந்துரைகளில் கணிசமாக குறைந்துள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார். தமிழகத்தின் மக்கள் தொகை மற்றும் பரப்பளவில் விகிதாசாரத்தை தவறான அடிப்படையாக கொண்டு உள்ளாட்சி அமைப்புகளின் மானியம் பரிந்துரை செய்யப்பட்டதால் தமிழகம் போன்ற நகரமயமாக்கப்பட்ட மாநிலங்கள் பாதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.


Tags : Central Government ,Tamil Nadu , Tamil Nadu, Finance, Central Government, Interim Budget, O.P.S.
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...