×

திருத்துறைப்பூண்டி உழவர் சந்தையில் நார்சத்து, நோய் எதிர்ப்பு சக்திமிகுந்த பனங்கிழங்கு விற்பனை விறுவிறுப்பு

திருத்துறைப்பூண்டி : திருத்துறைப்பூண்டி உழவர்சந்தையில் 60க்கும் மேற்ப்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு வேதாரண்யம் தாலுகா குரவா புலம், கத்திரிபுலம், கரியப்பட்டினம், சொன்பகராயநல்லூர், வடமழை மருதூர் வடக்கு போன்ற பல வேறு கிராமங்களில் இருந்து நாட்டு காய்கறிகளை விவசாயிகள் கொண்டுவந்து விற்பனை செய்து வந்தனர்.

கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர், டிசம்பர், கடந்த ஜனவரி மாதங்களில் பெய்த கடும்மழையால் காய்கறி அழுகி சேதம் அடைந்துவிட்டதால் ஜனவரி மாதம் முதல் தேங்காய், மாங்காய், எலுமிச்சை பழம், பனங்கிழக்கு, கீரை போன்றவை மட்டும் விற்பனைக்கு வருகிறது. அதுவும் பனங்கிழங்கு மட்டும் அதிகம் வருகிறது. உழவர்சந்தையில் மட்டும் ஒரு நாளைக்கு 10 ஆயிரத்துக்கு மேல் பனங்கிழங்குகளை பொதுமக்கள் வாங்கி சொல்கின்றனர். உழவர்சந்தையில் 100 பச்சை பனங்கிழங்கு ரூ.200, அவித்த பனங்கிழங்கு 100 ரூ.250க்கு விற்பனை செய்யப்படுகிறது. உழவர் சந்தை மட்டும் இல்லாமல் நகர பகுதிகளிலும் அதிக அளவில் பனங்கிழங்கு விற்கப்படுகிறது.

நன்மைகள்: பனங்கிழங்கில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இவை குளிர்ச்சி தன்மை உடையது. மலச்சிக்கலை தீர்க்கக்கூடியது. உடலுக்கு வலு சேர்க்கும். பனங்கிழங்கை வேக வைத்து சிறு, சிறு துண்டாக நறுக்கி காய வைத்து அதனுடன் கருப்பட்டி சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிட்டால், உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கும். பனங்கிழங்குடன் தேங்காய்ப் பால் சேர்த்து சாப்பிட்டால், உடல் உறுப்புகள் பலம் பெறும். பெண்களின் கர்ப்பப்பை பலம் அடையும். பனங்கிழங்கு வாயு தொல்லை உடையது. எனவே இதை தவிர்க்க பனங்கிழங்குடன் பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிடலாம். இனிப்பு தேவைப்படுகிறவர்கள் கருப்பட்டி சேர்த்து இடித்து சாப்பிடலாம்.

பனங்கிழங்கில் நார் சத்தும் அதிகம் இருப்பதால், இதை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பூமியில் இருந்து பனங்கிழங்கை பிரித்தெடுக்கும் போது, விதையில் இருந்து தவின் கிடைக்கும். தவின் சாப்பிட்டால் வயிற்று வலி, ஒற்றை தலைவலி உள்ளிட்ட நோய்கள் குணமாகும். பனை மரம் அதிக காலம் உயிர் வாழும் அதிசயம் கொண்டது.

இதில் இருந்து கிடைக்கக்கூடிய அனைத்து பொருட்களும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. பனை மரத்தில் இருந்து பனம்பழத்தை வெட்டி குழியில் போட்டு புதைத்து, பனங்கிழங்கு சாகுபடி செய்கிறார்கள். மிகவும் ஒல்லியாக உடல் எடை குறைவாக உள்ளவர்கள் இந்த பனங்கிழங்கை சாப்பிடுவதினால் உடல் எடையை மிக எளிதாக அதிகரிக்கலாம். அது மட்டும் இல்லாமல் உடல் சூட்டினை குறைக்கும். எனவே உடல் உஷ்ணத்தினால் உடல் எடை குறையும் அப்படிப்பட்டவர்கள் தினமும் பனங்கிழங்கை சாப்பிட்டு வரலாம்.

Tags : Thiruthuraipoondi: There are more than 60 shops in Thiruthuraipoondi Farmers Market. Vedaranyam taluka for these shops
× RELATED மோடியின் ஆதிக்கத்தில் இருந்து நாடு...