வலங்கைமான் பகுதி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்த நெல்மூட்டைகளை உடனடியாக அனுப்பி வைக்கவேண்டும்- விவசாயிகள் கோரிக்கை

*குரலற்றவர்களின் குரல்

வலங்கைமான் : வலங்கைமான் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனடியாக அப்புறப்படுத்த விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விவசாயிகள் அறுவடை செய்யப்படும் நெல்லை கொள்முதல் செய்யும் விதமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல்கொள்முதல் நடைzபெற்று வருகின்றது. நெல்கொள்முதல் செய்வதற்கு நடப்பு பருவத்திற்கு கிழிந்த நிலையில் உள்ள பழைய சாக்குகள் வழங்கப்படுகிறது.

மிகவும் கிழிந்த நிலையில் உள்ள சாக்குகள் வழங்கப்பட்டுள்ளதால் நெல் கொள்முதல் செய்வதில் விவசாயிகள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு மிகவும் சிரமம் ஏற்பட்டு வருகின்றது. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லில் சுமார் 20% மட்டுமே லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.இதன் காரணமாக பல ஆயிரம் நெல் மூட்டைகள் நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கின்றன. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லினை எதிர்பாராத மழை பெய்யும் மழையில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் விதமாக போதிய பிளாஸ்டிக் பைகள் வழங்கப்படவில்லை.

இதன் காரணமாக நெல் மூட்டைகள் திறந்த நிலையிலேயே உள்ளன.தற்போது வானம் மேகமூட்டத்துடன் லேசான சாரல் மழையும் அவ்வப்போது பெய்து வருகின்றது. வலங்கைமான் அடுத்த பாடகச்சேரிகிராமத்தில்உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் கடந்த 1ம் தேதி முதல் கொள்முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை கொள்முதல் நிலையத்தில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதில் சுமார் மூவாயிரம் மூட்டைகள் மட்டுமே லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. போதிய இடவசதி இல்லாமல் செயல்படும் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட பத்தாயிரம் நெல் மூட்டைகள் அனைத்தும் தேங்கி உள்ளதால் விற்பனைக்காக கொண்டு வரும் நெல்லை வைப்பதற்கு இடமில்லாமல் விவசாயிகள் சிரமம் அடைகின்றனர்.

எனவே தடையின்றி நெல்கொள்முதல் செய்திடவும் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லினை உடனடியாக அப்புறப்படுத்தவும் கொள்முதல் செய்வதற்கு தரமான சாக்குகள் வழங்கவும் மழை போன்றவற்றிலிருந்து நெல் மூட்டைகளை பாதுகாத்திட தேவையான அளவு பிளாஸ்டிக் பாய்கள் வழங்கிட வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>