×

தசாவதானி ஓவியா

நன்றி குங்குமம் தோழி

ஒரே நேரத்தில் பல செயல்களை செய்வதில் கவனம் செலுத்துபவர்களை அஷ்டாவதானி, தசாவதானி, சதாவதானி என்ற வார்த்தைகள்  குறிப்பிடுகின்றன. இதற்கு பழங்காலத்தில் செய்குதம்பி பாவலரை முன்பு உதாரணமாக கூறுவார்கள். இதே போன்று திறமை படைத்தவராக பிளஸ் 1  மாணவி ஒருவர் திகழ்கிறார். திருப்பூர் அப்பாச்சி நகரை சேர்ந்த அந்த மாணவியின் பெயர் ஓவியா.

இவரின் அப்பா கார்த்திகேயன் அச்சக ஊழியர். திருப்பூரில் உள்ள பிளாட்டோஸ் அகடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்  படித்துவரும் இவர் ஒரே  நேரத்தில் பல செயல்களை செய்யும் திறமையை கொண்டுள்ளார். அப்படி என்னதான் ஓவியா செய்கிறார். ஒரு நேரத்தில் ஒரு வேலையில் கவனம்  செலுத்தவே நம்மால் முடியவில்லை. இவர் எட்டு விதமான வேலைகளை செய்கிறார். சிலர் இரண்டு கையாலும் எழுதுவார்கள். ஓவியாவும்  எழுதுகிறார், ஆனால் ஒரே சமயத்தில், அதுவும் இரண்டு வெவ்வேறு பெயர்கள்.

எழுதும் போது அவருக்கு பிடித்த பாடலை பாடுகிறார். இது சகஜம் தானேன்னு நினைக்கலாம். ஆனால் ஓவியாவிடம் எழுதும் போது நாம் கேட்கும்  ஒவ்வொரு கேள்விக்கும் பதில் அளிக்கிறார். திருக்குறள் ஒன்று உச்சரித்தால் எத்தனையாவது குறள் என்று உடனே சொல்கிறார். பிறந்த தேதி  சொன்னால் கிழமையை கூறி அசத்துகிறார். இதற்கு இடையே மணி ஒலிக்கிறது, அது எத்தனை முறை ஒலிக்கிறதுன்னு கூறுகிறார். அப்போது  எத்தனை முறை தன் முதுகை தொட்டார்கள் என்ற எண்ணிக்கையும் கூறி அசத்துகிறார். இவ்வாறு 8 வகையான செயல்களை செய்யும் ஓவியா தன்  10 வயதில், 1330 திருக்குறளை மனப்பாடம் செய்து ஒப்பித்துள்ளார்.

இவரை தசாவதானி ஓவியா என அப்பகுதி மக்கள் செல்லமாக அழைக்கிறார்கள். 2015ம் ஆண்டு திருக்குறள் செல்வி என்ற விருது பெற்றுள்ளார்.  தமிழகம் மட்டுமில்லாமல் மலேசியாவின், கோலாலம்பூரிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார். அதற்காக பினாங்கு மாநில துணை முதல்வர்  இவருக்கு விருது வழங்கியுள்ளார். திருக்குறள் திருவருட் செல்வி, யுவ கலாபாரதி, பாலரத்னா... என பல விருதுகளை பெற்றுள்ளார். இவர்  வெளிநாடுகள் மற்றும் வெளியூர்களில் நிகழ்ச்சியில் பங்கேற்க இவர் படிக்கும் பள்ளியின் பள்ளித்தாளாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் தலைமை  ஆசிரியை உறுதுணையாக உள்ளனர்.

கோமதி பாஸ்கரன்

Tags : Dasavatani Oviya ,
× RELATED ஆரோக்கிய கூந்தலுக்கு உதவும் அர்கன் ஆயில்!