பிரிக்‍ஸ் மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகிறார் சீன அதிபர் ஜின்பிங்!: வருகை தேதி விரைவில் அறிவிப்பு..!!

வூஹான்: பிரிக்‍ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வருகை தர உள்ளார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்‍ஸ் மாநாடு, இந்த ஆண்டு மத்தியில் நடைபெறவுள்ளது. இம்முறை இந்த மாநாட்டை இந்தியா நடத்தவுள்ளது. இதற்கு சீனாவும் ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும் இந்த சந்திப்பு எல்லை நெருக்கடியால் பாதிக்கப்படாது என்று கூறி  உள்ளது. இந்த ஆண்டு கூட்டத்தை நடத்துவதில் நாங்கள் இந்தியாவை ஆதரிக்கிறோம் என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங்  வென்பின் கூறி உள்ளார்.

தொடர்ந்து, பொருளாதார ஒத்துழைப்பு, அரசியல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு, மக்களிடமிருந்து மக்கள் மற்றும் கலாச்சார பரிமாற்றங்கள் ஆகியவற்றைக் குறிக்கும் வகையில், தகவல் தொடர்பு, உரையாடலை வலுப்படுத்தவும்,  ஒத்துழைப்பை பலப்படுத்தவும் நாங்கள் இந்தியா மற்றும் பிற உறுப்பினர்களுடன் இணைந்து செயல்படுவோம் என கூறினார். பிரிக்ஸ் மாநாட்டிற்கு முன்னதாக கொரோனா தணிந்து ஓரளவு இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த மாநாடு காணொலி வாயிலாக அல்லாமல் நேரலையாக நடைபெறும் என கூறப்படுகிறது.

எனவே இந்தியா - சீனா இடையே எல்லை பிரச்சனை பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் சூழலில் சீன அதிபரின் இந்திய வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் வருகை தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

>