×

தேர்தலில் அதிமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்று துரோகிகள் தீய எண்ணத்தோடு செயல்பட தொடங்கி இருக்கிறார்கள்: சசிகலா மீது இபிஎஸ், ஓபிஎஸ் பகிரங்க தாக்கு

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக நேற்று தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதம்: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் வகுத்துக் கொடுத்த பாதையில் இன்றுவரை அதிமுக அடிபிறழாமல் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதா இம்மண்ணுலகைவிட்டு பிரிந்திருந்தாலும், அவர் உழைப்பாலும், தியாகத்தாலும் உயிரூட்டி வளர்த்த இந்த இயக்கத்திற்கு நன்மை செய்வோரை அன்போடு ஆசீர்வதித்தும், தீங்கு செய்ய நினைப்போரை அறத்தின் வழி நின்று அழித்தும், ஒழித்தும் ஜெயலலிதாவின் ஆன்மா இந்த இயக்கத்தை என்றும் காத்துவரும் என்பதும் நம் நம்பிக்கை.

இந்த நம்பிக்கையில் இருந்து தான், எப்பேர்பட்ட இன்னலை நாம் சந்திக்க நேர்ந்தாலும், துளியும் அச்சம் இல்லாமல் அதை எதிர்கொள்ளும் துணிச்சலை நாம் பெறுகிறோம் என்பது நம் இதயங்களுக்கு தெரியும். நம் விசுவாசமானது ஜெயலலிதாவிற்கும், அவரது கண்ணுக்கு கண்ணாய் இருந்த இயக்கத்துக்கும், இந்த இயக்கத்தை மீண்டும் மீண்டும் ஆட்சி பீடத்தில் அமர வைக்கும் மக்களுக்கும் தான் சொந்தம். இன்னும் இரண்டே மாதங்களில் நாம் மீண்டும் ஒரு பரீட்சையை சந்திக்க உள்ளோம். இதில் நல்லாட்சி பெற்ற மக்களும், நண்பர்கள் பலரும் நம் பக்கம் இருந்தாலும் துரோகிகள் எப்படியாவது நம் படையை வீழ்த்த வேண்டும் என்ற தீய எண்ணத்தோடு செயல்பட தொடங்கி இருக்கிறார்கள்.

இவர்களையெல்லாம் நம் உழைப்பாலும், உத்வேகத்தாலும், ஒற்றுமை உணர்வாலும், மக்கள் மீதுள்ள நேசத்தாலும், திசை மாறா விசுவாசத்தாலும் தோற்கடித்து, மக்கள் விரோதிகளுக்கு மீண்டும் ஒரு மாபெரும் பாடத்தை நாம் கற்பிக்க வேண்டும். இந்த குறிக்கோளோடு அதிமுகவினர் அனைவருக்கும் ஒரு அன்பு வேண்டுகோளை விடுக்கிறோம். பிப்ரவரி 24 - ஜெயலலிதாவின் பிறந்த நாள். இந்த நாளன்று நீங்கள் ஒவ்வொருவரும் ``என் இல்லம் ஜெயலலிதாவின் இல்லம்’’ என்று உளமார நினைத்துக்கொண்டு உங்கள் வீடுகளில் சரியாக மாலை 6 மணிக்கு தீபம் ஒன்றினை ஏற்றி, கண்களை மூடியவாறு உள்நோக்கி பார்த்து, ஜெயலலிதாவின் புனித ஆன்மாவிடம் பிரார்த்தனை செய்து, உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

* 6 மணிக்கு மணியடிக்கும் பாணியில் விளக்கு வைக்க வேண்டுகோள்
கொரோனா தொற்று அதிகமாக இருந்தபோது, கடந்த ஏப்ரல் 9ம் தேதி, `இரவு 9 நிமிடங்களை விளக்கை அணைத்து ஒற்றுமையை வெளிப்படுத்துங்கள்’ என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். ”வீட்டில் தீபம், டார்ச், செல்போன் லைட்டை எரியவிட்டு ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும்” என்றும் கூறினார். இப்போது அந்த பாணியில் முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஜெயலலிதா பிறந்தநாளில் தொண்டர்கள் மாலை 6 மணிக்கு வீட்டில் தீபம் ஏற்றி, அதிமுகவை காக்க உறுதிமொழி எடுக்க கூறியுள்ளனர். பிரதமர் மோடியின் அந்த அறிவிப்பு மக்களின் கிண்டலுக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.

Tags : Sasikala , The traitors are beginning to act with evil intent to overthrow the AIADMK regime in the elections: EPS, OPS public attack on Sasikala
× RELATED புழல் மகளிர் சிறை காவலருக்கு பெண் கைதி கொலை மிரட்டல்..!!