×

விவி மினரல்ஸ் வைகுண்டராஜனுக்கு 3 ஆண்டு சிறை, ரூ.5 லட்சம் அபராதம்: டெல்லி சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: மத்திய அரசின் சுற்றுச்சூழல் அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் விவி குரூப்ஸ் தலைவர் வைகுண்டராஜனுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு பிறப்பித்துள்ளது. தென்மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான விவி.மினரல்ஸ் எனப்படும் தாதுமணல் ஏற்றுமதியாளர் வைகுண்டராஜன், மத்திய சுற்றுச்சூழல் அதிகாரியான நீரஜ் கட்ரிக்கு ரூ.4 லட்சத்து 13 ஆயிரம் லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த லஞ்சமானது, ஆலை கிளியரன்சுக்காக கடந்த 2012ம் ஆண்டு கொடுத்தாக கூறப்பட்டது.

இந்த புகாரில், லஞ்சம் வாங்கிய மத்திய அரசு அதிகாரி நீரஜ் கட்ரி, லஞ்சம் கொடுத்த வைகுண்டராஜன் மற்றும் அதற்கு உதவியதாக விவி.மினரல்ஸ் ஊழியர் சுப்புலட்சுமியும் வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கு கடந்த 2019ம் ஆண்டு சிபிஐயால் பதிவு செய்யப்பட்டு, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த 1ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், முதல் குற்றவாளியாக நீரஜ் கட்ரியும், இரண்டாவது குற்றவாளியாக வைகுண்டராஜனும், மூன்றாவது குற்றவாளியாக லஞ்சம் கொடுக்க உதவிய விவி மினரல்ஸ் ஊழியர் சுப்புலட்சுமியும், நான்காவது குற்றவாளியாக வி.வி. மினரல்ஸ் நிறுவனம் என அறிவித்த நீதிமன்றம், தண்டனை விவரங்களை பிப்ரவரி 22ம் தேதி வழங்குவதாக தெரிவித்திருந்தது.

இதன்படி வழக்கில் தண்டனை விவரங்களை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி நிர்ஜா பாட்டியா நேற்று அறிவித்தார். அதில்,\”வி.வி.மினரல்ஸ் வைகுண்ட ராஜனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. லஞ்சம் கொடுக்க உதவியதாக அந்த நிறுவன ஊழியர் சுப்புலட்சுமிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. வழக்கில் முதல் குற்றவாளியான அரசு அதிகாரி நீரஜ் கட்ரிக்கு 5 ஆண்டுகள் சிறையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர தனியாக வி.வி. மினரல்ஸ் நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது’’ என உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : Vivi Minerales ,Vaikurajan ,Delhi ,CBI Court Action Tribunal , Vivy Minerals Vaikuntarajan jailed for 3 years, fined Rs 5 lakh: Delhi CBI court orders action
× RELATED சிறையில் இருந்து ஆட்சி நடத்த...