×

புதுச்சேரியில் நிகழ்த்தப்பட்டுள்ள ஜனநாயக படுகொலையை எதிர்த்து திமுக-காங்கிரஸ் கூட்டணி மக்கள் மன்றம் செல்லும்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: புதுச்சேரியில் மத்திய பாஜ அரசு நிகழ்த்தியுள்ள ஜனநாயக படுகொலையை எதிர்த்து திமுக- காங்கிரஸ் கூட்டணி மக்கள் மன்றம் செல்லும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட  அறிக்கை: புதுச்சேரி  துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை மாற்ற வேண்டும் என நீண்டகாலமாகக் கோரிக்கை வைக்கப்பட்டு-போராட்டங்கள் நடத்தப்பட்டபோது அலட்சியமாக இருந்து, புதுச்சேரி மக்களை வஞ்சித்த மத்திய பாஜ அரசு,  சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், பிற மாநிலங்களில் செய்தது போலவே எம்.எல்.ஏ.க்களை விலை பேசும் குதிரை பேரம் நடத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு நெருக்கடி கொடுத்ததுடன், துணை நிலை ஆளுநர் கிரண்  பேடியை மாற்றிவிட்டு, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை துணை நிலை ஆளுநர் கூடுதல் பொறுப்பாக நியமித்த போதே இதன் உள்நோக்கத்தைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டேன்.

 மிகவும் மோசமான-அரசியல் நாகரிகமற்ற அந்த உள்நோக்கத்தின் அடிப்படையில், குதிரை பேரம் நடத்தியும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் - தாங்களாகவே நியமித்துக்கொண்ட உறுப்பினர்களுக்கு பேரவையில் வாக்குரிமை உண்டு எனச்  சொல்லியும், புதுச்சேரியில் மக்கள் நலன் காத்த முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசைக் கவிழ்த்திருக்கிறது பாஜ. பாஜவின் மக்கள் விரோத செயல்பாடுகளையும்-சட்ட அத்துமீறல்களையும் பேரவையில் எடுத்துரைத்து, தனது  முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் நாராயணசாமி. ஜனநாயகம் காப்பதில் அவருடைய துணிச்சலான செயல்பாட்டை வாழ்த்துகிறேன். தமிழகத்துடன் இணைந்து புதுச்சேரியும் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ள நிலையில்  ஜனநாயகப் படுகொலையை நடத்தியிருக்கிறது மத்திய பாஜ அரசு.

தமிழ்நாட்டில் ஒரு சட்டமன்ற உறுப்பினர்கூட இல்லாவிட்டாலும், அடிமை அதிமுகவை கைப்பாவையாக்கி ஆட்சி நடத்துவது போல, புதுச்சேரியில்  தேர்தலைத் தள்ளிவைத்து, துணை நிலை ஆளுநர் மூலம் மறைமுக ஆட்சி நடத்திட  முயற்சித்தால் அதனை நீதிமன்றத்தில் சட்டரீதியாக எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளில் திமுக துணை நிற்கும். அதிகார துஷ்பிரோயகம் செய்து சட்டமன்றங்களில் சடுகுடு ஆடலாம். மக்கள் மன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டு  அமைதியாக இருக்காது. அதனால், இந்த ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து திமுக-காங்கிரஸ் கூட்டணி மக்கள் மன்றம் செல்லும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வரியை குறைக்க வேண்டும்
திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது ஒரு சங்கிலித் தொடர் போன்றது. இதனுடைய விலை  உயரும்போது விலைவாசி உயர்கிறது. அதாவது உயர் வகுப்பினர், நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள் என அனைவரையும் பாதிக்கக் கூடியதாக இருக்கிறது. அசாம் மாநிலத்தில் உள்ள பாஜ அரசு வரியைக் குறைத்து, லிட்டருக்கு 5 ரூபாய்  பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்திருக்கிறது. அந்த கட்சியுடன் கூட்டணியாக இருக்கும் முதல்வர் பழனிசாமி தமிழகத்தில் பெட்ரோல்-டீசல் விலையைக் குறைக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

இதேபோல் பெட்ரோல் விலை முன்பு உயர்ந்த போது, 2018ல் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் வரியைக் குறைத்தார். அதன்மூலம் பெட்ரோல் - டீசல் விலையையும் குறைத்தார். தற்போது மேற்கு வங்க அரசும் வரியைக்  குறைத்துள்ளது. ஆகவே, பழனிசாமியும் கொரோனா காலத்தில் அவரே உயர்த்திய வரியையாவது இப்போது குறைத்து, பெட்ரோல்-டீசல் விலை உயர்வைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.



Tags : Timu-Congressional Alliance ,People's Forum ,Democratic massacre ,New Delhi ,BC ,Q. ,Stalin , The DMK-Congress alliance will go to the People's Forum to protest against the democratic massacre in Pondicherry: MK Stalin's announcement
× RELATED அரசு பெண்கள் தொழிற்பயிற்சி மையம்: பெண்கள் கூட்டமைப்பு கோரிக்கை