×

ராஜபாளையத்தில் வைரலாகுது வாரிசு சர்டிபிகேட் பிப்ரவரி 30ம் தேதி இறந்ததாக சான்றிதழ் அளித்த தாசில்தார்

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே பேயம்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி அழகர்சாமி. இவர் 2000ம் ஆண்டு காலமானார். வீட்டை விற்பதற்காக, இவரது மகன் குமாரசாமி, தந்தையின் இறப்பு சான்றிதழை பெற ராஜபாளையம் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அவருக்கு 2000ம் ஆண்டு பிப்ரவரி 30ம் தேதி அழகர்சாமி இறந்ததாக குறிப்பிட்டு இறப்புச் சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதை கவனிக்காமல் குமாரசாமி சான்றிதழ்களை வாங்கிச்சென்று விட்டார். இந்த நிலையில் அழகர்சாமியின் பேரன் உதயகுமார், வங்கி கடன் பெறுவதற்காக வாரிசு சான்றிதழை வங்கியில் அளித்தார்.

சான்றிதழைப் பார்த்த வங்கி அதிகாரிகள், அதில் குறிப்பிடப்பட்டிருந்த தேதியைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பிப்ரவரி மாதத்தில் 30ம் தேதியே இல்லை; இல்லாத ஒரு நாளில், இறந்ததாக சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது என்று கூறி, கடன் கோரும் விண்ணப்பத்தை நிராகரித்தனர். பிப்ரவரி 28ம் தேதிக்கு பதில் பிப்ரவரி 30ம் தேதி என சான்றிதழ் தவறாக கொடுக்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரிந்தது. இதுகுறித்து ராஜபாளையம் தாசில்தார் ஸ்ரீதரிடம் கேட்டபோது, ``சான்றிதழ் பெறுவதற்காக வழங்கப்பட்ட மனு குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்று கூறினார். உலகிலேயே இல்லாத ஒரு தேதியில் ஒருவர் இறந்ததாக தாசில்தார் சான்றிதழ் கொடுத்த சம்பவம் ராஜபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் இது வைரலாகி வருகிறது.

Tags : Dasildar ,Rajapalaya , Viral heir certificate in Rajapalayam Certificate of death on February 30
× RELATED தேர்தல் பறக்கும் படை சோதனை:...