கோஷ்டி குழப்பம் போய் மீண்டும் சீட் தரணும் தாயே... காளி கோயிலில் கறி விருந்து வழங்கி எம்எல்ஏ வேண்டுதல்

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை (தனி) தொகுதியில் 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் மாரியப்பன் கென்னடி வெற்றி பெற்றார். டிடிவி. தினகரனின் அமமுகவில் இணைந்ததால், கட்சி தாவல் சட்டத்தில் இவர் எம்எல்ஏ பதவி இழந்தார். தொடர்ந்து 2019 இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக நெட்டூர் நாகராஜன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வரும் தேர்தலிலும் அதிமுக சார்பாக போட்டியிட மீண்டும் நெட்டூர் நாகராஜன் தலைமையிடம் சீட் கேட்டு காய் நகர்த்தி வருகிறார். முன்னாள் சேர்மன்கள் பாக்யலட்சுமி, மாரிமுத்து உள்ளிட்ட பலரும் சீட் கேட்டு வருவதால், தனக்கே சீட் கிடைக்கும் வேண்டுதலோடு, கட்சியினரை, பொதுமக்களை கவர இவர், ‘‘கறி விருந்து’’ நடத்த தொடங்கி உள்ளார்.

மானாமதுரை தொகுதியை பாஜவிற்கு ஒதுக்கி, மாநில தலைவர் முருகன் இங்கு போட்டியிடலாம் என பரவலான பேச்சு உள்ளது. இந்நிலையில் திருப்புவனம் ஒன்றிய அதிமுகவினரை குறிவைத்து, கறி விருந்தை இவர் தொடங்கியுள்ளார்.  மடப்புரத்தில் நேற்று நடந்த கறி விருந்தில் 14 ஆடுகள் வெட்டப்பட்டு 3 ஆயிரம் பேருக்கு விருந்து பரிமாறப்பட்டது. எம்எல்ஏ நெட்டூர் நாகராஜனிடம் கேட்டபோது, ‘‘ஜெயலலிதா பிறந்த நாளுக்காகத்தான் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம்ங்க’’ என்கிறார். நெட்டூர் நாகராஜனின் ஆதரவாளர்கள், ‘‘வேண்டும் வரம் கிடைக்கும் நம்பிக்கையிலேயே, இந்த கிடா விருந்தை எம்எல்ஏ நடத்தி இருக்கிறார்’’ என்கின்றனர்.

Related Stories:

>