×

திருவாரூர் அருகே பயங்கரம் அதிமுக கவுன்சிலர் தலை துண்டித்து படுகொலை: சாலையில் வீசி சென்ற கும்பல்

முத்துப்பேட்டை: திருவாரூர் அருகே நேற்று அதிகாலை அதிமுக கவுன்சிலர் தலை துண்டித்து படுகொலை செய்து தலையை சாலையில் வீசி சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கோவிலூர் மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (38). அதிமுக ஒன்றிய கவுன்சிலரான இவர் மீது, கொலை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை 7 மணிக்கு ராஜேஷ் வீட்டிலிருந்து பைக்கில் ஆலங்காடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை ஒரு கும்பல் வழிமறித்தது.

அவர்களிடமிருந்து தப்பிய ராஜேஷை கார் மற்றும் பைக்கில் பின் தொடர்ந்து வந்த அதே கும்பல் ஆலங்காடு கயிறு தொழிற்சாலை அருகே பைக்கை பின்னால் இடித்து தள்ளி விட்டது. இதனால் நிலை தடுமாறி சாலையோரம் உள்ள வாய்க்காலில் விழுந்த ராஜேஷ் அவர்களிடமிருந்து தப்பி புதருக்குள் நுழைந்து மெயின்ரோட்டுக்கு வர முயற்சித்தார். ஆனால் அவரை தப்பவிடாமல் அந்த கும்பல் புதருக்குள் வைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டி தலையை தனியாக துண்டித்து எடுத்தனர். இதையடுத்து அந்த கும்பல், தலையை அவருடைய கைலியில் சுற்றி எடுத்துக்கொண்டு முத்துப்பேட்டை ஆசாத்நகர் கடைத்தெரு வேகத்தடை அருகே வீசி விட்டு தப்பி சென்றனர். தகவலறிந்து அங்கு வந்த முத்துப்பேட்டை போலீசார் தலை மற்றும் உடலை மீட்க சென்றனர்.

அப்போது அங்கு வந்த உறவினர்கள், குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை எடுக்க விடமாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், உடலை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருச்சி மண்டல ஐ.ஜி. ஜெயராம், தஞ்சை சரக டி.ஐ.ஜி. ரூபேஸ்குமார்மீனா, எஸ்பிக்கள் துரை (திருவாரூர்), ஸ்ரீநாத் (மயிலாடுதுறை) ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது. கொலை நடந்த இடத்தில் துப்பாக்கி ஒன்றை கண்டெடுத்து போலீசாரிடம் கொடுத்தனர். இந்த துப்பாக்கி, ராஜேஷ் வைத்திருந்ததா? அல்லது கொலையாளிகள் கொண்டு வந்ததா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையான ராஜேஷுக்கு மனைவி பேபியும் ருத்திரவீரன் என்ற 8 மாத ஆண் குழந்தை உள்ளனர்.

Tags : Tiruarur , AIADMK councilor beheaded near Thiruvarur
× RELATED திருவாரூரில் மாணவர்களுக்கு கொரோனா...