×

அகமது படேலின் வெற்றிடத்தை பூர்த்தி செய்ய தேசிய அரசியலுக்கு திரும்பும் கமல்நாத்

போபால்: மறைந்த அகமது படேலில் வெற்றிடத்தை பூர்த்தி செய்யும் வகையில் தேசிய அரசியலுக்கு மீண்டும் கமல்நாத் திரும்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கமல்நாத், டெல்லி அரசியலில் நீண்ட காலமாக பணியாற்றியவர். கடந்த 2018 நவம்பரில் மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தல் நடப்பதற்கு முன்பாக சில மாதங்களுக்கு முன்பு மத்தியப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற பின்னர் அவர் மாநில முதல்வரானார். ஆனால், அடுத்த சில மாநிலங்களில் ஜோதிராதித்யா தலைமையிலான 22 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்ததால் கமல்நாத் தலைமையிலான ஆட்சி 2020 மார்ச் மாதம் கவிழ்ந்தது. தற்போது சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது.

தற்போது கமல்நாத் மத்தியப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும், எதிர்கட்சி தலைவராகவும் இரட்டை பொறுப்பை வகித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது பட்டேல் உடல்நலக் குறைவால் இறந்தார். அதனால், அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக கமல்நாத்திற்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மத்திய அரசுக்கு எதிராக கடும் குற்றச்சாட்டுகளை கூறிவரும் கமல்நாத், பழையபடி தேசிய அரசியலுக்கு திரும்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த ஊகங்கள் குறித்து கமல்நாத் கூறுகையில், ‘மத்திய பிரதேசத்தை விட்டு நான் எங்கும் செல்ல விரும்பவில்லை என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளேன். ஆனால், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பாக எனக்கு எந்தவொரு பொறுப்பை கொடுத்தாலும், அதனை நிறைவேற்றுவேன். மத்தியப் பிரதேசத்தில் இருந்தே அந்த பொறுப்பை என்னால் நிறைவேற்ற முடியும்’ என்றார்.

Tags : Kamalnath ,Ahmed Patel , Kamalnath
× RELATED மத்திய பிரதேச மாஜி முதல்வர்...