×

சிவகாசியில் மாநில சேவல் சண்டை போட்டி: 1500 சேவல்கள் பங்கேற்பு

சிவகாசி: சிவகாசியில் மாநில அளவில் நடந்த சேவல் சண்டை போட்டியில் 1500க்கும் மேற்பட்ட சேவல்கள் கலந்து கொண்டன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு சிவகாசியில் மாநில அளவிலான வெற்றுக்கால் சேவல் சண்டை போட்டி நேற்று நடைபெற்றது. அதிமுக மேற்கு, கிழக்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற இந்த போட்டியை முன்னாள் எம்பி ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். சென்னை, கோவை, நெல்லை, சேலம், திருச்சி உட்பட தமிழகம் முழுவதும் இருந்து 1500க்கும் மேற்பட்ட சேவல்கள் போட்டியில் பங்கேற்றன. இதற்காக, 100 களங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சேவல் வட்டதுக்கு வெளியே சென்றாலோ அல்லது தலை துவண்டாலோ அல்லது ஓடினாலோ தோற்றதாக அறிவிக்கப்பட்டது. போட்டியில் 320 சேவல்கள் வெற்றி பெற்றன. 480 சேவல்கள் பங்கேற்ற போட்டி டிராவில் முடிந்தது. வெற்றி பெற்ற சேவல்களுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரிசு வழங்கினார்.

முதல்பரிசை தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த பிரதீப் சேவலும், 2வது பரிசை நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஆனைக்குட்டிகுமாரின் சேவலும், 3ம் பரிசை சேலம் மாவட்டம் மீன்பாடி ராஜகமல் சேவல்களும் தட்டி சென்றன. முதல்பரிசாக பிரிட்ஜ், 2ம் பரிசாக கிரைண்டர், 3ம் பரிசாக மிக்ஸி மற்றும் வெற்றி பெற்ற சேவல்களுக்கு டிவி, காஸ் அடுப்பு, குத்துவிளக்கு போன்றவைகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை சிவகாசி, திருத்தங்கல் சேவல் கலை நண்பர்கள் விமல், விசால் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். பரிசளிப்பு விழாவில் அதிமுக நிர்வாகிகள் பொன் சக்திவேல், புதுப்பட்டி கருப்பசாமி, பலராம், தெய்வம், கோகுலம் தங்கராஜ், சுபாஷினி மற்றும் நிர்வாகிள் கலந்து கொண்டனர்.

Tags : State Rooster Fighting Competition ,Sivikazi , Sivakasi
× RELATED சிவகாசியில் பத்திரிக்கை வைத்து...