×

தென் மாவட்ட சுற்றுப்பயணம்: கன்னியாகுமரியை கண்டுகொள்ளாத முதல்வர்: அதிமுகவில் உர்ர்ர்....

நாகர்கோவில்: தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி மாவட்டங்கள் தோறும் சென்று பிரசாரம் செய்து வருகிறார். அவரது தென் மாவட்ட பயண திட்டத்தில் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த அவர் ஸ்ரீவைகுண்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். தூத்துக்குடி, திருச்செந்தூர், ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளிலும் அவரது பிரசார பயணம் அமைந்தது. வழக்கமாக தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர் அப்படியே குமரி மாவட்டத்திலும் சுற்றுப்பயணம் மேற்கொள்வது வழக்கம். மாவட்ட வாரியாக நடைபெற்ற ஆய்வு கூட்டங்களிலும் அவ்வாறுதான் நடந்தது.

ஆனால் இந்த முறை குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தை தென் மாவட்ட சுற்றுப்பயணங்களுடன் மேற்கொள்வதை அவர் தவிர்த்தார். ஏற்கனவே திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் குமரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று சென்றுள்ள நிலையில் அதற்கு ஏற்ப முதல்வரின் சுற்றுப்பயணம் உடனடியாக அமையும், முதல்வர் தேர்தல் பிரசார நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசுவார் என்று எதிர்பார்த்த அதிமுகவினர் இதனால் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.
குமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகலும் திமுக கூட்டணி வசம் உள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும் தொகுதி காங்கிரஸ் வசம் சென்றது. அடுத்து சட்டமன்ற தேர்தலுடன் எம்பி தொகுதி இடைத் தேர்தலும் நடைபெற உள்ளது. இந்தநிலையில் கடந்த இரண்டு முறை முதல்வர் குமரி மாவட்ட வருகை நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து அமைந்தது. இருந்தபோதிலும் தேர்தல் பிரசாரத்தில் முதல்கட்டத்தில் அவர் கண்டுகொள்ளாமல்போனது ஏன் என்ற கேள்வியும் அதிமுகவினர் வசம் இருந்து வருகிறது. தொகுதிகளை பெரும்பாலும் பா.ஜ கேட்டு வரும் நிலையில் தற்போது பிரசாரம் தேவையில்லாத ஒன்றாக அமையும், தொகுதி பங்கீடு முடிந்த பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணமும் அதிமுக மேலிடத்தில் எழுந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Tags : South District ,Kanyakumari , Kanyakumari
× RELATED தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுகவினர் நீர்மோர் பந்தல் அமைக்க வேண்டும்