×

'வெற்றி நடைபோடும் தமிழகமே '..அரசு செலவில் வெளியிடப்படும் விளம்பரத்திற்கு தடை கோரி வழக்கு : தேர்தல் ஆணையம், தமிழக அரசு பதில் தர நோட்டீஸ்!!

சென்னை :அதிமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற தலைப்பில் அரசு செலவில் விளம்பரம் வெளியிடுவதை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம், தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால், தமிழக அரசின் சார்பில், அதிமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு, வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற தலைப்பில்,  பத்திரிகை, தொலைக்காட்சிகளில் விளம்பரம் வெளியிடப்படுகிறது.

இந்த விளம்பரங்களுக்கு தடை விதிக்க கோரி திமுக சார்பில் அதனை அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும்   அத்தொகையை அதிமுக கட்சியிடம் வசூலிக்க உத்தரவிடக் கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.இந்த வழக்குகள், தலைமை நீதிபதி சஞ்சீப்  பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது,  திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், மக்களின் நலனுக்காக பயன்படுத்த வேண்டிய நிதி கடந்த 2 மாதங்களாக விளம்பரங்களுக்காக தவறாக பயன்படுத்தப்படுகிறது.முதல்வர் வேட்பாளர் மற்றும் ஆளும் கட்சியை முன்னிலை படுத்தும் வகையில் வெளியிடப்படும் இந்த விளம்பரத்திற்கு  தடை விதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்துள்ளோம் என்று வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட தேர்தல் ஆணைய தரப்பு மூத்த வழக்கறிஞர், இந்த விவகாரம் தொடர்பாக அதிமுகவிடம் விளக்கம் கேட்டு பெற்றுள்ளோம். அதை தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதால், மனுவுக்கு விரிவாக பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரினார்.

தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்படவில்லை. ஜி எஸ் டி யுடன் சேர்த்து 64 கோடியே 72 லட்சம் ரூபாய் மட்டும் செலவிடப்பட்டுள்ளது.அரசின் சாதனைகளை விளக்கி வெளியிடப்படும் இந்த விளம்பரங்கள் வழங்குவது, கடந்த 18ம் தேதியுடன் நிறுத்தப்பட்டு விட்டது எனக் கோரினார்.இதையடுத்து வழக்கு விசாரணையை மார்ச் 2ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், வழக்குகள் தொடர்பாக பதிலளிக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

Tags : Tamil Nadu ,Election Commission ,Government of Tamil Nadu , அதிமுக
× RELATED திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள்,...