புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது: முதல்வர் நாராயணசாமி ராஜினாமா.. கவர்னர் ஆட்சி அமலாக வாய்ப்பு!!

புதுச்சேரி :புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது .சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். புதுச்சேரியில் 2016ல் 15 தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. முதல்வர் நாராயணசாமி அமைச்சரவையில் இருந்த 2 அமைச்சர்கள் மட்டுமின்றி 2 எம்எல்ஏக்களும் தங்களது அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்தனர். ஏற்கனவே ஒரு எம்எல்ஏ ஆளுங்கட்சியில் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் அரசுக்கான ஆதரவு 14ஆக இருந்தது. இதேபோல் எதிர்க்கட்சிகளும் தங்களுக்கு நியமன எம்எல்ஏக்கள் ஆதரவையும் சேர்த்து 14 பேர் இருப்பதால் அரசு பெரும்பான்மை இழந்து விட்டதாக கவர்னர் தமிழிசையை சந்தித்து பேசினர். அதன்பிறகு சட்டசபையை 22ம்தேதி மாலை 5 மணிக்குள் கூட்டி பெரும்பான்மை நிரூபிக்க முதல்வருக்கு, கவர்னர் உத்தரவிட்டார்.

இதனிடையே காங்கிரஸ் எம்எல்ஏவான லட்சுமிநாராயணன், திமுக எம்எல்ஏ வெங்கடேசன் இருவரும் நேற்று தங்களது பதவியை அடுத்தடுத்து ராஜினாமா செய்து சபாநாயகர் வி.பி சிவக்கொழுந்திடம் கடிதம் கொடுத்தனர். இதை சபாநாயகர் உடனடியாக ஏற்றுக் கொண்ட நிலையில், அரசுக்கான ஆதரவும் 12 ஆக குறைந்தது. இதனால் நாராயணசாமி அரசுக்கு நெருக்கடி முற்றியது. .இந்த நிலையில் புதுச்சேரி சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடியது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். நியமன எம்எல்ஏக்களும் பங்கேற்றனர்.  சட்டசபை சிறப்பு கூட்டம் தொடங்கியதும், சபாநாயகர் வி.பி சிவக்கொந்து திருக்குறளை வாசித்து சபையை தொடங்கி வைத்தார்.அதைத் தொடர்ந்து தனது அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது முதல்வர் நாராயணசாமி பேசினார். அப்போது தனது அரசுக்கு பெரும்பான்மை உள்ளதாக தெரிவித்த அவர், சாதனைகளை பட்டியலிட்டார்.

பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. சபையில் ஆளுங்கட்சிக்கு காங்கிரஸ்-9 (சபாநாயகர் உள்பட), திமுக-2, சுயேட்சை-1 என மொத்தம் 12 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தது.எதிர்க்கட்சிகள் வரிசையில் என்ஆர் காங்கிரஸ்- 7, அதிமுக-4, பாஜ நியமன எம்எல்ஏக்கள்-3 என மொத்தம் 14 பேர் இடம்பெற்றிருந்தனர். இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததால் புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது என்று சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். இதையடுத்து  முதல்வர் நாராயணசாமி கவர்னர் மாளிகைக்கு ஆளுநர் தமிழிசையிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அதன்பிறகு புதுச்சேரியில் கவர்னர் ஆட்சி அமலாவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

Related Stories: