திரியும் பால், குழையும் சோறு!: வடசென்னையில் ஊடுருவிய கடல் நீரால் 4 மடங்கு உப்பாக மாறிய நிலத்தடி நீர்..குடிநீருக்கு மக்கள் தவிப்பு..!!

சென்னை: வடசென்னை கடலோர பகுதிகளில் 18 கிலோ மீட்டருக்குள் நீர் ஊடுருவி விட்டதால் நிலத்தடி நீர் 4 மடங்கு உப்பாக மாறிவிட்டது. அண்ணா பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் இந்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் போதிய அளவுக்கு நிலத்தடி நீர் இருந்தும் பயன்படுத்த முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். திரிந்து போகும் பால், குழைந்து போகும் சோறு, வேகாத பருப்பு, குடிக்க முடியாத தண்ணீர். இத்தகைய பரிதாபத்திற்கு ஆளாகி இருப்பவர்கள் வடசென்னை கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள்.

திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களிலும் இதே நிலைதான். பொன்னேரி, பஞ்சட்டி, வன்னிப்பாக்கம் பகுதிகளில் 18 கிலோ மீட்டர் தொலைப்போக்கு நிலத்துக்கு அடியில் கடல்நீர் ஊடுருவி நிலத்தடி நீர் உவர்பாக மாறிவிட்டதே இதற்கு காரணம். அண்ணா பல்கலைக்கழகத்தின் இயற்கை பேரிடர் பிரிவு, ஜெர்மன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்திய இது தெரியவந்துள்ளது. 1996ல் கடல்நீர் ஊடுருவல் வெறும் 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு மட்டுமே இருந்ததை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆரணி ஆறு, கொசஸ்தலை ஆற்றின் கரையோரங்களில் இக்கிராமங்கள் இருந்தும் நிலத்தடி நீர் பாதிப்பில் உலகத்தில் மோசமான பகுதியாக பட்டியலிடப்பட்டுள்ளது. கடல்நீர் ஊடுருவல் காரணமாக காட்டூர், மவுதம்பேடு, செங்காணிமேடு கிராமங்களில் நிலத்தடி நீர் 4 மடங்கு உப்பாக மாறிவிட்டது. இதனால் பால் காய்ச்சவோ, சமையல் செய்யவோ நிலத்தடி நீரை பயன்படுத்த முடியவில்லை. குளித்தால் உடல் முழுவதும் அரிப்பு ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் புலம்பி தீர்க்கின்றனர்.

இக்கிராமங்களில் உள்ள 50 கிணறுகளில் 2 மாதங்களுக்கு ஒருதடவை தண்ணீரை எடுத்து பரிசோதித்து பார்த்ததில் கடல்நீர் உட்புகுத்தலால் சோடியம் குளோரைடு அளவு 10 மடங்கு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால் போதிய அளவுக்கு நிலத்தடி நீர் இருந்தும் அதனை பயன்படுத்தமுடியவில்லை. மீஞ்சூர் உள்ளிட்ட சில இடங்களில் 2015ம் ஆண்டுக்கு பிறகு நிலத்தடி நீரின் உவர்ப்பு தன்மை சற்று குறைந்துள்ளது. மற்ற இடங்களிலும் நிலத்தடி நீரின் உவர்ப்பு தன்மை மாறவேண்டும் என்றால் தடுப்பணைகளை கட்டி மழைநீரை சேமிக்க வேண்டும் என ஆய்வு குழு பரிந்துரைத்துள்ளது.

Related Stories:

>